
இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
______________________________________________
“தீவனத் தொட்டியில் மீட்பர்”
நிகழ்வு
அமெரிக்காவைச் சார்ந்தவர் அனிசா அயலா (Anissa Ayala). இவருக்குப் பதினாறு வயது நடக்கும்பொழுது இரத்தப் புற்றுநோய் (Leukemia) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் இவருடைய பெற்றோரிடம், “உங்களுடைய மகளுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதால், கூடிய விரைவில் அவளுக்கு எலும்பு மச்சை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு (Bone Marrow Transplantation) ஏற்பாடு செய்யுங்கள். இல்லையென்றால் அவர் பிழைப்பு கடினம்” என்றார்கள்.
இச்செய்தி அனிசா அயலாவின் பெற்றோருடைய உள்ளத்தில் பேரிடியாய் விழுந்தது. அவர்கள் மருத்துவர்களிடம், “எங்களுடைய எலும்பு மச்சையை அனிசா அயலாவிற்குப் பொருத்தலாமா?” என்று கேட்டார்கள். மருத்துவர்கள் அதற்கு முடியாது என்று சொல்ல, அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம், “எங்களுடைய மகளுக்கு எலும்பு மச்சையைத் தரமுடியுமா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். யாருமே இதற்கு முன் வருவதால் அவர்கள் வருத்தம் கொள்ளத் தொடங்கினர்கள். ஏனெனில், மருத்துவர்கள் அனிசா அயலாவிற்குக் குறித்த நாள் நெருங்கிக்கொண்டே வந்தது.
இதற்கு நடுவில் அனிசா அயலாவிற்கு மரிசா (Marissa) என்றொரு தங்கை பிறந்திருந்தாள். அவள் பிறந்து பதினான்கு மாதங்கள் ஆனபோது, அவளுடைய பெற்றோருக்கு, ‘மரிசாவின் எலும்பு மச்சையை அனிசா அயலாவிற்குப் பொருத்தலாமா…?’ என்றோர் எண்ணம் தோன்றியது. இதை அவர்கள் மருத்துவர்களிடம் சொன்னபொழுது, “நீங்கள் தயார் என்றால், நாங்களும் தயார்” என்று சொல்லி, 1991 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 4 ஆம் ஆண்டு அனிசா அயலாவிற்கு எலும்பு மச்சை மாற்று அறுவைச் சிகிச்சை செய்தார்கள். இதனால் அனிசா அயலா உயர்பித்தார். மரிசாவும்கூட எலும்பு மச்சையைக் கொடுத்த பின்னும் நல்ல உடல் நலத்தோடு இருந்தார்.
ஆம், பதினான்கு வயதுக் குழந்தையான மரிசா தன்னுடைய எலும்பு மச்சையைக் கொடுத்து, தன் சகோதரி அனிசா அயலாவின் உயிரைக் காப்பாற்றினார்; அவரை மீட்டார். ஆண்டவராகிய இயேசுவும் நம்மை மீட்பதற்காக ஒரு குழந்தையாகப் பிறந்தார். அதைத்தான் இன்று நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாகப் கொண்டாடுகின்றோம். மகிழ்ச்சி பொங்கும் இப்பெருவிழா நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கேட்டார்கள்
இன்றைய நற்செய்தியில் வானதூதர், கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத் தோன்றி, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியான இயேசுவின் பிறப்பைப் பற்றிச் சொல்வதையும், அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் குழந்தை இயேசுவைக் காணச் சென்றதையும், பின்னர் அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே சென்றதையும் குறித்து வாசிக்கின்றோம்.
யூதச் சமூகத்தில் இடையர்கள் மிகவும் பின்தங்கியவர்களாக, சாதாரணமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வானதூதர் மூலம் ஆண்டவரின் பிறப்புச் செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்டதைக் கொண்டே, இயேசுவின் பிறப்பு எல்லாருக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி என்று சொல்லலாம். மேலும் வானதூதர் அவர்களிடம் இயேசுவின் பிறப்பைப் பற்றிச் சொன்னபொழுது, அதை அப்படியே கேட்டார்கள். அவர்கள் பரிசேயர்களைப் போன்று காதிருந்தும் செவிடர்களாய் இருக்கவில்லை (மாற் 8: 18). இவ்வாறு இடையர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றார்கள்.
இங்கு, நாம் ஏன் கடவுளின் வார்த்தையை, அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இது குறித்துத் திருத்தூதர் புனித பவுல் கூறும்பொழுது, “அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10: 17) என்பார். ஆம், வானதூதர் தங்களுக்கு அறிவித்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை இடையர்கள் கேட்டார்கள். இதனால் அவர்களுக்கு இயேசுவின் பிறப்பில் நம்பிக்கை ஏற்பட்டது.
நம்பினார்கள்
வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டதால் இடையர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று மேலே பார்த்தோம். இடையர்கள் வானதூதர் சொன்னதை நம்பியதன் வெளிப்பாடாக, குழந்தை இயேசுவைக் காணச் செல்கின்றார்கள். “நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாக இருக்கும்” (யாக்கோபு) என்ற புனித யாக்கோபின் வார்த்தைகளுக்கு ஏற்ப இடையர்கள், வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டதனால் ஏற்பட்ட நம்பிக்கையை வெறும் சொல்லளவில் வைத்திருக்காமல், அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும்வகையில் குழந்தை இயேசுவைக் காணச் சென்றார்கள். அங்கு அவர்கள் கேட்டது போன்று அல்லது அவர்கள் நம்பியது போன்று, ஆண்டவராகிய மெசியா என்றும் மீட்பர் தீவனத் தொட்டியில் கிடத்தியிருக்கக் காண்கின்றார்கள்.
தீவனத் தொட்டி என்பது இடையர்களுக்கு நன்று அறிமுகமான ஒன்று. தங்களிடம் உள்ள ஆடு மாடுகளுக்கு உணவு கொடுக்கப் பயன்படுத்தவும் ஓர் இடத்தில் ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் கிடத்தப்பட்டிருந்த காட்சி இடையர்களுக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கும். மட்டுமல்லாமல், குழந்தை இயேசு இவ்வுலகிற்கு வாழ்வளிக்கும் உணவாக இருக்கப்போகின்றார் என்பதை அவர்களுக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கும். ஆம், இடையர்கள் வானதூதர்கள் சொன்னதை நம்பினார்கள். அந்த நம்பிக்கையினால் அவர்கள் மெசியாவைக் காணும் பேறுபெறுகின்றார்கள்.
புகழ்ந்தார்கள்
இடையர்கள் ஆண்டவராகிய மெசியாவைத் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்ட நிலையில் கண்ட பிறகு அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள் என்று வாசிக்கின்றோம். அவர்கள் ஏன் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே செல்ல வேண்டும் என்ற அடுத்த கேள்வி எழலாம். இதற்கு இயேசு தன் சீடர்களிடம் கூறும், “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பேறுபெற்றோர்” (லூக் 10: 23-24) என்ற வார்த்தைகளே பதிலாக இருக்கின்றன.
ஆண்டவராகிய மெசியாவைக் காண்பதற்குப் பலரும் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்; ஆனால், அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. மாறாக, எளிய மனத்தவரும், வானதூதரின் வார்த்தைகளை அப்படியே நம்பியவர்களுமான இடையர்களுக்கு அந்தப் பேறு கிடைத்தது. அதனாலேயே அவர்கள் தங்களுக்குக் கிடைத்த இந்த மிகப்பெரிய பேற்றிற்காகக் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே சென்றார்கள். நாமும் இடையர்களைப் போன்று எளியவர்களாக, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதனை நம்பி, அதன்படி செயல்படக்கூடியவர்களாக இருந்தால், அவர்களுக்குக் கிடைத்த பேறு நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
ஆகவே, எல்லா மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியான இயேசுவின் பிறப்புப் பெருவிழாவில், இடையர்களைப் போன்று ஆண்டவரின் வார்த்தையைக் கேட்போம்; கேட்பவற்றை நம்பி ஏற்றுக்கொள்வோம்; நம்பி ஏற்றுக்கொண்டதை நம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம். அதன்மூலம் இயேசுவின் பிறப்புப் பெருவிழாவைப் பொருளுள்ளதாக்குவோம்.
சிந்தனை
‘இயேசு கிறிஸ்து ஆயிரம் முறை பெத்லகேமில் பிறந்தாலும், என்னுடைய உள்ளத்தில் பிறக்கவில்லை என்றால், எல்லாமே வீண்தான்’ என்பார் ஏஞ்சலூஸ் சிலேசியுஸ் என்ற அறிஞர். ஆகையால், இயேசு கிறிஸ்துவை நம்முடைய உள்ளத்தில் பிறக்கச் செய்வோம். அதற்கு நாம் இடையர்களைப் போன்று ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed