
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79
அக்காலத்தில்
திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
லூக்கா 1: 67-79
தேடிவந்து விடுவித்திருளிய ஆண்டவர்
நிகழ்வு
மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத மன்னன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவனிடத்தில் சென்ற பெண்மணி ஒருத்தி, “மன்னா! என்னுடைய கணவர் ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு, என்னை ஒரு விலங்கைப் போன்று மிகவும் கேவலாக நடத்துகின்றார். அவரிடம் மாட்டிக்கொண்டு என்னுடைய வாழ்க்கையே சீரழிந்துவிட்டது. எனக்கொரு நல்ல வாழ்க்கை அமைய நீங்கள்தான் வழிவகை செய்யவேண்டும்” என்றாள்.
இதைக் கேட்டதும் மன்னன், “உங்களுடைய குடும்பப் பிரச்சனையை என்னிடம் எதற்குச் சொல்கின்றாய்…? அதையெல்லாம் தீர்த்துவைக்க எனக்கு நேரமில்லை” என்று சீறினான். வந்திருந்த பெண்மணியோ புத்திசாலி. அதனால் அவள் மன்னிடம், “மன்னா! என்னுடைய கணவர் என்னை ஒவ்வொருநாளும் சித்திரவதை செய்துகொண்டிருந்தால்கூட நான் பொறுத்துக் கொள்வேன்; ஆனால், அவர் உங்களைப் பற்றியும் தவறாகப் பேசுகின்றார். அதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார்.
உடனே மன்னன் வந்திருந்த பெண்மணியின் கணவரைத் தன் படைவீரர்களை அனுப்பி, அழைத்து வரச்செய்து, தன்னைப் பற்றித் தவறாகப் பேசியதற்காக அவனுக்குத் தண்டனை அளித்து, அவருடைய மனைவியுடன் இருந்த வழக்கைத் தீர்த்து வைத்து, அவளோடு அனுப்பி வைத்தான்.
வேடிக்கையான நிகழ்வாக இருந்தாலும், இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதும் இல்லை; மக்களை அவர்கள் தேடிச் செல்வதுமில்லை. மாறாக, மக்களே அவர்களைத் தேடிச் செல்லும் நிலை இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவுசெய்கின்றது. நற்செய்தியில், ஆண்டவரே தன் மக்களைத் தேடி வந்து விடுவித்தருளினார் என்று வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தேடி வந்த கடவுள்
குழந்தைப் பேறு இல்லாமல் பல ஆண்டுகள் இருந்த செக்கரியா-எலிசபெத் தம்பதிக்கு அவர்களுடைய முதிர்ந்த வயதில் கடவுள் ஒரு குழந்தையை அருளினார். இதைத் தொடர்ந்து செக்கரியா கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியா இறைவனைப் போற்றிப் புகழும் பாடலில் இரண்டு முக்கியமான செய்திகள் அடக்கியிருக்கின்றன. ஒன்று கடவுள் தம் மக்களைத் தேடி வந்து மீட்டது. இரண்டு, திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார் செய்யப்போவது. இந்த இரண்டு செய்திகளையும் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போம்.
மக்களெல்லாம் கடவுளைத் தேடிச் சென்றுகொண்டிருக்கும் காலமிது (ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்); ஆனால், கடவுளே தன் மக்களைத் தேடி வந்தார், அதுதான் மீட்பின் வரலாறு. இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் செக்கரியாவின் புகழ்ச்சிப் பாடலில் செக்கரியா, “ஆண்டவர் தம் மக்களைத் தேடி வந்து விடுவித்திருளினார்” என்கின்றார். ஆம். ஆதாம் செய்த பாவத்தால், பாவத்திற்கு அடிமையான மாந்தர்களை பாவத்திலிருந்தும், தீமையிலிருந்து ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்க இயேசு மனிதராகி, தன் விலை மதிக்கப்பெறாத திரு இரத்தத்தைச் சிந்தினார். இவ்வாறு அவர் மீட்பரானார்.
திருமுழுக்கு யோவானைப் போன்று ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்துவோம்
ஆண்டவராகிய கடவுள் தன் மக்களைத் தேடி வந்து, அவர்களைப் பாவத்திலிருந்தும், தீமையின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்தார் எனில், அவருக்காக மக்களைத் தயார்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இத்தகைய பணியைச் செய்த அல்லது செய்யப்போகும் தன் மகன் யோவானைக் குறித்துத் தன்னுடைய பாடலின் இரண்டாவது பகுதியில் குறிப்பிடுகின்றார் செக்கரியா.
ஆம், செக்கரியா-எலிசபெத் தம்பதியின் மகனான யோவான், ஆண்டவரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்தார். அதன்பொருட்டு அவர் மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, அவர்கள் தங்களுடைய பாவத்திலிருந்து மனம்மாறச் செய்தார். நாளைய நாளில் நாம் ஆவலோடு எதிர்பார்த்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடப் போகின்றோம் என்றால், அதற்காக நாம் மக்களை நல்லமுறையில் தயாரிக்கவேண்டும். அதற்கு முதலில் நாம் தயாராக இருக்கவேண்டும். திருமுழுக்கு யோவான் ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்து, மக்களை மெசியாவின் வருகைக்காகத் தயாரித்தார். அது போன்று நாமும் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருந்து மக்களைத் தயாரிக்கவேண்டும். இது நாம் செய்யவேண்டிய தலையாய பனி.
எனவே, நாம் நம்மைத் தேடி வருகின்ற மெசியாவின் வருகைக்காக மக்களை நல்லமுறையில் தயாரித்து, அவர் வருகின்றபொழுது, அவரைத் தகுந்த முறையில் எதிர்கொள்வோம்.
சிந்தனை
‘நானே என் மந்தையைத் தேடிச் சென்று காப்பேன்’ (எசே 34: 11) என்பார் தலைவராகிய ஆண்டவர். ஆகையால், நம்மைத் தேடி வரும் ஆண்டவரை, மெசியாவை இனங்கண்டு அவருடைய வழியில் நடந்து, மற்றவரையும் அவருடைய வழியில் நடக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed