
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45
அக்காலத்தில்
மரியாள் புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
லூக்கா 1: 39-45
“வாழ்த்துரையும் பேருவகையும்”
நிகழ்வு
திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன ஒரு கணவனும் மனைவியும் ஓர் உளவியலாரைப் பார்க்கச் சென்றனர். அவர்கள் இருவரும் உளவியலாரிடம் சென்றதும், கணவர் உளவியலாரிடம் பேசத் தொடங்கினார்: “நாங்கள் இருவரும் திருமணம் செய்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஐந்து ஆண்டுகளிலும் எங்களுக்குள் ஓயாமல் சண்டைச் சச்சரவுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தச் சண்டை சச்சரவுகளெல்லாம் ஓய்ந்து, எங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்க நீங்கள்தான் எங்களுக்கு நல்லதோர் அறிவுரையைச் சொல்லவேண்டும்.”
கணவர் இவ்வாறு சொல்லி முடித்ததும், உளவியலார் அவரிடம், “உங்களுக்கிடையே அடிக்கடி சண்டை வரக் காரணம் என்ன என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றார். உடனே கணவர், “இதோ இருக்கின்றாளே என் மனைவி! இவள் நான் சொல்வதை ஒருபோதும் கேட்பதில்லை; அவள் விருப்பத்திற்குத்தான் செயல்படுவாள். அதனால்தான் எங்கள் இருவருக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன” என்றார். “இல்லை இல்லை, இவர் சொல்வது முற்றிலும் பொய். இவர்தான் நான் சொல்வதை ஒருபோதும் கேட்பதில்லை. இதனாலேயே குடும்பத்தில் ஓயாத சண்டை” என்றார் மனைவி.
இப்படிக் கணவர் மனைவி இருவரும் ஒருவர் மற்றவரைக் குறை சொல்லத் தொடங்கிப் பெரிய சண்டை வந்ததால், உளவியலார் அவர்கள் இருவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார். பின்னர் அவர் அவர்கள் இருவரிடமும் ஒரு காகிதத்தையும் பேனாவையும் கொடுத்து, “நீங்கள் இருவரும் ஒருவர் மற்றவரிடம் இருக்கின்ற நல்ல பண்புகளை இதில் எழுதுங்கள்” என்றார். இதைக் கேட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்த கணவரும் மனைவியும் ஒருவர் மற்றவரிடம் இருக்கின்ற நல்ல பண்புகளை ஒவ்வொன்றாக எழுதத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் எழுதி முடித்ததும், உளவியலார் அவர்களிடம், “இப்பொழுது உங்களுடைய கையில் உள்ள காகித்தை ஒருவர் மற்றவோடு மாற்றிக்கொள்ளுங்கள்” என்றார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
இதையடுத்து கணவர், தன் மனைவி தன்னிடத்தில் இருந்த நல்ல பண்புகளை உயர்வாக எழுதியிருந்ததைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். மனைவியும் தன் கணவர் தன்னிடமுள்ள நல்ல பண்புகளை உயர்வாக எழுதியிருந்ததை எண்ணி மகிழ்ந்தார்.
இருவருடைய முகத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழிவதைப் பார்த்த உளவியலார் அவர்கள் இருவரிடமும், “நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் குறைகூறிக் கொண்டிருந்தபொழுது, உங்களுக்கிடைய சண்டைதான் ஏற்பட்டது. மாறாக, எப்பொழுது நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்தி எழுதத் தொடங்கினீர்களோ அப்பொழுதே உங்களுடைய முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியத் தொடங்கியது. அதனால் உங்களுடைய இல்லற வாழ்க்கை சண்டை சச்சரவு இல்லாமல், மகிழ்ச்சியாக இருக்க. ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்” என்றார்.
ஆம், எப்பொழுது நாம் ஒருவரையொருவர் வாழ்த்திப் பேசுகின்றோமோ அப்பொழுது அந்த இடத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வும் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எலிசபெத்தை அன்னை மரியாள் வாழ்த்துதல்
தன்னுடைய உறவினரான எலிசபெத்து, தன் முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கின்றார் என்ற செய்தியை வானதூதர் வழியாக அறிய வரும் அன்னை மாமரி அவருடைய வீட்டிற்கு விரைந்து செல்கின்றார். மாமரி எலிசபெத்தின் வீட்டை அடைந்ததும், செய்த முதல் செயல், அவரை வாழ்த்தியதுதான். ஆம், மாமரி எலிசபெத்தை வாழ்த்தியதும் அவருடைய வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளுகின்றது. ஒருவர் மற்றவரை வாழ்த்துகின்றபொழுது எப்படி ஒரு நேர்மறையான மாற்றம் அல்லது மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
மாமரியல எலிசபெத் வாழ்த்துதல்
மாமரி எலிசபெத்தை வாழ்த்தியதும், பதிலுக்கு அவர், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்று மாமரியை வாழ்த்துகின்றார். இதனால் மாமரி இறைவனை வாழ்த்திப் போற்றத் தொடங்குகின்றார் (லூக் 1: 46-56). இவ்வாறு எலிசபெத்தின் வீடே மகிழ்ச்சி பொங்கி வழியும் ஓர் இடமாக மாறத் தொடங்குகின்றது.
நாம் ஒருவர் மற்றவரை, அவரிடம் உள்ள நல்ல பண்புகள் இனங்கண்டு கொண்டு வாழ்த்த வேண்டும். அப்படிச் செய்தால் நம்முடைய உள்ளத்திலும், நாம் இருக்கும் இடத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழியும் என்பது உறுதி. நாம் ஒருவர் மற்றவரை மனமுவந்து வாழ்த்துகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘ஒரு சிறிய வாழ்த்துக்கு அல்லது பாராட்டிற்கு ஒருவருடைய ஒரு நாளை, அவருடைய வாழ்க்கையை மாற்றிப்போடும் வல்லமை இருக்கின்றது. அதனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் மற்றவரை மனமுவந்து வாழ்த்துவதுதான்’ என்பார் மார்கரெட் கசின்ஸ் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒருவர் மற்றவர் மனமுவந்து வாழ்த்துவோம்; எப்பொழுதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed