இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-17
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும்.
இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
மறையுரைச் சிந்தனை :
வரலாற்று நாயகன் இயேசு!
1978 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட Roots – வேர்கள் – என்ற தொடர் பெருவாரியான மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட ஒரு தொடர்.
இந்தத் தொடர், சிந்தியா என்ற கறுப்பினத்தைச் சார்ந்த மூதாட்டி, அலெக்ஸ் ஹைலி (Alex Hailey) என்ற தன்னுடைய பேரனுக்கு கதை சொல்வது போன்று இருக்கும். இந்தத் கதையில், மூதாட்டி தன்னுடைய முன்னோர் யார் யார், எப்படி அவர்கள் எல்லாம் அமெரிக்காவிற்கு வந்தார்கள் என்பதைப் பற்றி மிகவும் சுவாஸ்ரமாகச் சொல்வார்.
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்கும் அலெக்ஸ் ஹைலிக்கு, தன்னுடைய முன்னேர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அப்போதே துளிர்விடும். சில ஆண்டுகள் கழித்து, அவன் வளர்ந்து பெரியவனாகும்போது தன்னுடைய முன்னோர்களைப் பற்றிய தேடலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடுவான். அப்படி ஆராய்சியில் ஈடுபடும்போது தன்னுடைய முன்னோர்கள் அனைவரும் ஆப்ரிக்காவைகச் சார்ந்தவர்கள் என்பதும் அவர்கள் அனைவரும், வெள்ளையர்களால் கப்பலில் வைத்து இழுத்துவரப்பட்டு, அமெரிக்காவில் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையையும் அறிந்து மிகவும் மனவேதனை அடைவான்.
இதற்குப் பின்பு அலெக்ஸ் ஹைலி, ஆப்ரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்று, அங்கு தன்னுடைய பாட்டி, தனக்குச் சொன்ன தனது முன்னோரான ‘கன்றே குவின்டோ’வை (Kanre Quinto) யாருக்காவது தெரிந்திருக்கிறதா? என்று விசாரித்துப் பார்ப்பான். அப்படி விசாரித்துப் பார்க்கும்போது, அவர் ஓர் இனத்துக்கே தலைவர என்பதும், மக்களுக்காக அவர் எதையும் செய்யத் துணிபவர் என்பதும் கேட்டு இன்னும் ஆச்சரியப்படுவான். இப்படிப்பட்ட ஒரு தலைவரையா இந்த ஆங்கிலேயர்கள் பிடித்துவந்து அடிமையாக்கினார்கள்?, இவரைப் போன்று இன்னும் எத்தனை எத்தனை தலைவர்களை இந்த ஆங்கிலேயர்கள் பிடித்துவந்து அடிமையாக்கினார்களோ? என்று யோசித்துப் பார்த்து மிகவும் மிகவும் வேதனையடைவான். இத்தோடு அந்தத் தொடர் நிறைவு பெறும்.
ஆங்கிலேயர்களுடைய அடிமைச் சந்தையை இந்தத் தொடர் மிகவும் கேள்விக்குள்ளாக்கியதால், இது வந்த காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
Roots தொடரில் வரும் அலெக்ஸ் ஹைலியைப் போன்று நாமும் நம்முடைய மூதாதையர்களைப் பற்றிய ஆராய்சியில் ஈடுபட்டால், நாம் அனைவரும் ஒரு தாய் பெற்ற (ஆதாம் – ஏவாள்) மக்கள் என்ற உண்மை தெரியவரும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமுறை அட்டவணையைக் குறித்து வாசிக்கின்றோம். இன்னாருக்கு இன்னார் பிறந்தார், அவருக்கு இவர் பிறந்தார் என்று வரும் இந்தத் தலைமுறை அட்டவணை நமக்கு வேண்டுமானால் வாசிக்கின்றபோது ‘சலிப்பூட்டலாம்’. ஆனால் யூதர்களைப் பொருத்தவரைக்கும் இது மிகவும் முக்கியமான ஒன்று. யூதர்கள் எப்போதும் தங்களைத் ‘தூய இரத்தம்’ ‘ஆபிரகாமின், தாவீதின் வழிவந்தவர்கள்’ என்று சொல்லி பெருமையடிக்கக் கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ம தலைமுறை அட்டவணையானது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்று. . மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் தலைமுறை அட்டவணையைக் கொடுப்பதன் வழியாக அவர் ஆபிரகாமின், தாவீதின் வழிவந்தவர் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்றார்.
அடுத்ததாக, இயேசுவின் தலைமுறை அட்டவணை நமக்குச் சொல்கின்ற செய்தி, இறைவனானவர் வான் மேகங்களில் உறைந்துகொண்டிருப்பவர் அல்ல, அவர் வையகத்தில் மக்களோடு மக்களாக இருப்பவர் என்பதாகும். இதைத் தான் தூய யோவான் தன்னுடைய நற்செய்தியில், “வார்த்தை மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) என்று கூறுகின்றார். ஆம் இயேசு தாவீதின் ஊரில், மரியாவின் வயிற்றில் பிறந்ததால், அவர் வரலாற்று நாயகனாகின்றார்.
நிறைவாக, இயேசுவின் தலைமுறை அட்டவணையைப் படித்துப் பார்க்கின்றபோது இறைவனின் எல்லையற்ற இரக்கமும் அன்பும் வெளிப்படும். வழக்கமாக யூதர்களுடைய தலைமுறை அட்டவணையில் பெண்களின் பெயர் இடம்பெறவே பெறாது. ஆனால், இயேசுவின் தலைமுறை அட்டவணையில் மரியாவைத் தவிர்த்து ‘தாமார், ராகாப், உரியாவின் மனைவி பெத்சபா’ என்ற மூன்று பெண்களுடைய பெயர்கள் இடம்பெறுகின்றன. இந்த மூன்றுபேருமே ‘பாவிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்களும் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் வருவதால், இறைவன் எல்லார்மீதும் இரங்குபவர், எல்லாருக்குமானவர் என்ற செய்தியானது மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகின்றது.
ஆம், கடவுளுக்கு யாரும் வேண்டாதவர்களோ, தீண்டத் தகாதவர்களோ கிடையாது. எல்லாரும் அவருடைய மக்கள். எல்லாரும் அவருடைய அன்புக்கு உரியவர்கள்.
ஆகவே, எல்லாருடைய மீட்பிற்காக இந்த மண்ணுலகிற்கு வருகின்ற இயேசுவை திறந்த மனதுடன் வரவேற்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed