
நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62
அக்காலத்தில்
இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.
இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.
வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
லூக்கா 9: 57-62
“சீடத்துவமும் அதற்காக நாம் கொடுக்கவேண்டிய விலையும்”
நிகழ்வு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒரு பிரபல செய்தித்தாளில் இப்படியொரு விளம்பரம் வந்திருந்தது:
“மிகவும் கடினமாக பயணத்திற்கு ஆள்கள் தேவை. மிகவும் சொற்ப ஊதியம்தான் கிடைக்கும்; கடுங்குளிரைத் தாங்கிக்கொள்ளவேண்டும்; பல மாதங்கள் இருட்டிலேயே பயணப்பட வேண்டும்; எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும்; திரும்பி வருவது ஐயம்தான். ஒருவேளை பயணம் வெற்றிகரமாக முடிந்தால், பெயரும் புகழும் கிடைக்கும். இப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த பயணத்திற்கு விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.”
செய்தித்தாளில் வந்திருந்த இப்படியொரு வித்தியாசமான விளம்பரத்திற்கு, ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில் இருபத்து எட்டுப் பேர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த இருபத்து எட்டுப் பேர்களைக் கொண்டு 1914 ஆம் ஆண்டு அண்டார்டிகாவை நோக்கி, ‘Endurance’ என்ற கப்பலானது, தனது பயணத்தைத் தொடர்ந்தது. பயணம் நன்றாகச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, கப்பலானது பனிப்பாறையின்மீது மோதி, உடைந்துபோனது. இதனால் அந்தக் கப்பலில் பயணம் செய்த இருபத்து எட்டுப் பேர்களும் அதிலிருந்து தப்பித்து, மூன்று சிறு படகுகளின் வழியாக அண்டார்ட்டிகாவிற்குச் சென்று, பல்வேறு சிரமங்களுக்கு நடுவிலும் தங்களுடைய ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு, வெற்றியோடு திரும்பி வந்தனர். இதனால் அந்த இருபத்து எட்டுப் பேர்களுக்கும் பெயரும் புகழும் கிடைத்தன (Delights to Cherish – Dhinakaran).
ஆம், கடினமான பயணத்தை மேற்கொண்ட அந்த இருபத்து எட்டுப் பேர்களுக்கும் கடைசியில் எப்படிப் பெயரும் புகழும் கிடைத்தனவோ, அப்படி கடினமான பணியான சீடத்துவப் பணியை யாரெல்லாம் செய்ய முன்வருகின்றார்களோ, அவர்களுக்குக் கடவுளின் அருள் அபரிமிதமாகக் கிடைக்கும். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் சீடராக இருப்பதற்கு ஒருவர் என்ன விலை கொடுக்கவேண்டும்… எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பன குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
எப்படிப்பட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும்
நற்செய்தியில், இயேசு தன் சீடர்களோடு நடந்துசென்றுகொண்டிருக்கும்பொழுது ஒருவர் அவரிடம் வந்து, “….நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கின்றார். இயேசுவிடம் வருகின்ற இந்த மனிதர், திருச்சட்ட அறிஞர் என்பார் மத்தேயு நற்செய்தியாளர் (மத் 8: 19) இயேசுவோடு அடிக்கடி விவாதம் செய்தவர்கள், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் திருச்சட்ட அறிஞர்களும்தான். இப்படி இயேசுவோடு விவாதம் செய்த திருச்சட்ட அறிஞர்களுள் ஒருவரே, அவரைப் ‘பின்பற்றுவேன்’ என்று சொல்வது நமக்கு வியப்பாக இருந்தாலும், இயேசு அவரிடம், தன்னைப் பின்பற்றும்பொழுது, ஒருவர் எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதை, “…மானிடமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்ற வார்த்தைகளில் சொல்கின்றார். ஆம், இயேசுவைப் பின்தொடர்பவர் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும்.
இறைவனுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்
திருச்சட்ட அறிஞர் அங்கிருந்து போனபின்பு, இயேசு தாமாகவே ஒருவரிடம், “என்னைப் பின்பற்றி வாரும்” என்கின்றார். அதற்கு அந்த மனிதர் “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்கின்றார். யூதச் சமூகத்தில் தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணித்த ஒருவர் அல்லது நாசீர், இறந்த உடலைத் தொடக்கூடாது என்றொரு சட்டம் இருந்தது (லேவி 21: 11; எண் 6: 6-8). அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, இயேசுவால், ‘என்னைப் பின்பற்றி வாரும்’ என அழைக்கப்பட்ட மனிதர், அவருக்கு முன்னுரிமை கொடுத்து, அவரைப் பின்தொடர்ந்திருக்கவேண்டும்; ஆனால், அவர் ‘என் தந்தையை அடக்கவேண்டும்’ என்று சொல்லி அவரைப் பின்தொடராமலேயே போய்விடுகின்றார். இந்த மனிதர் இயேசுவிடம் இப்படிச் சொல்லும்பொழுது, அவருடைய தந்தை இறக்கவில்லை; உயிரோடுதான் இருந்தார் என்றும், அவருடைய தந்தை இறந்தபிறகு, அவர் இயேசுவைப் பின்பற்றுவதாகவும் சொன்னார் என்று திருவிவிலிய அறிஞர்கள் சொல்வார்கள்.
ஆம், இயேசுவின் சீடர்கள் அவருக்கு முன்னுரிமை தராமல், அடுத்தவருக்கு முன்னுரிமை தந்தால், அவருடைய சீடராக இருக்க முடியாதுதானே!
முன்வைத்த காலைப் பின் வைக்கக்கூடாது
நற்செய்தியில் வருகின்ற மூன்றாவது மனிதர் இயேசுவிடம், “…என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்கின்றார். இந்த இடத்தில் இறைவாக்கினர் எலிசாவை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இறைவாக்கினர் எலியா, எலிசாவை அழைத்ததும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருகின்றார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை (1 அர 19: 19-21). ஆம், இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒவ்வொருவரும் முன்வைத்த காலை பின் வைக்காமல், முன்னோக்கிச் செல்லவேண்டும். இதற்கு நாம் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘சீடத்துவ வாழ்வு என்பது மலர்ப் படுக்கை அல்ல, அது முட்படுக்கை’ என்பர். ஆகவே, சீடத்துவ வாழ்வில் இருக்கும் சவால்களையும் துன்பங்களையும் உணர்ந்தவர்களாய், இறைவன் என்றும் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed