இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13
அக்காலத்தில்
மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
செப்டம்பர் 21 – புனித மத்தேயு – திருத்தூதர், நற்செய்தியாளர் விழா
மறையுரைச் சிந்தனை
இன்று திருச்சபையானது தூய மத்தேயுவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. மத்தேயு என்றால் ‘கடவுளின் கொடை” என்பது பொருளாகும். மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய பெயருக்கு ஏற்றது போன்று கடவுளிடமிருந்து பெற்ற கொடையை எல்லா மக்களுக்கும் வழங்கினார். இவர் எழுதிய நற்செய்தி நூல் மிகவும் சிறப்பானது. பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ நெறியை இந்தியாவிற்கு அறிவிக்க வந்த தூய பிரான்சிஸ் சவேரியார் தன்னோடு மத்தேயு நற்செய்தியைத்தான் எடுத்து வந்தார் என்பது மத்தேயு நற்செய்தியின் சிறப்பு. மேலும் நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகள் தன்னுடைய போராட்டத்திற்கான உத்வேகத்தை ஆண்டவர் இயேசுவின் மலைபொழிவிலிருந்துதான் (மத்தேயு நற்செய்தியிளிலிருந்துதான்) பெறுகிறார் என்பது மத்தேயு நற்செய்தியின் கூடுதல் சிறப்பு.
இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் இவரது வாழ்வும், இவரது விழாவும் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
மத்தேயுவைப் பற்றி அறிய முற்படும்போது இவர் இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் ஒருவர் (மத் 9:9) என்று தெரிகிறது. கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு அழைத்து அவரோடு விருந்துண்டு தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார் (மத்10:3).
மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள் (1:13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம் காட்டுகின்றன. மாற்கு(2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின் மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.
அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின் கலிலேயா பகுதியில் பிறந்தவர். ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர். கிரேக்க, அரமேய மொழிகளில் மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில்தான், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். தனது அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார். (மாற்கு 2:16-17)
புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து செபித்தனர். பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு, அவர்கள் அனைவரும் ‘இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா’ என்று எருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர்.
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூதக் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத்தேயு 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையில், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.
இவரது வாழ்வையும், நற்செய்தி நூலையும் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம் இவரது விழா உணர்த்தும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “கடவுள் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்” என்று படிக்கின்றோம். ஆம், இறைவனின் பணியை குறிப்பிட்ட மக்கள்தான் செய்யவேண்டும் என்றில்லை அல்லது இறைப்பணி குறிப்பிட்ட மக்களுக்கு உரியது என்று நினைப்பது தவறு. அப்பணியைச் செய்ய எல்லாருக்கும் உரிமை உண்டு, எல்லாருக்கும் பங்கு உண்டு. தூய மத்தேயு வரிதண்டுபவராக/ பாவியாக இருந்தாலும் கடவுள் அவரைத் தன்னுடைய திருப்பணிக்கு அழைத்தார். எனவே நாம் இறைபணி எல்லாருக்கும் பொதுவானது என்ற உண்மையை உணர்ந்து கொள்வோம்.
அடுத்தாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், “பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று. நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவைப் போன்று இரக்கத்தின் கருவிகளாக விளங்க வேண்டும். அதுதான் இந்த விழா உணர்த்தும் மேலான பாடமாக இருக்கின்றது. நாம் செலுத்தும் பலிகள், பூசைகள் அனைத்தையும் விட, ஒருவர் மற்றவரிடம் காட்டும் இரக்கம் மிகப்பெரியது.
பெருநகரில் வாழ்ந்துவந்த ஓர் இளைஞர்குலாம் மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா சென்றது. அங்கே அவர்களுக்கு மலையின் உச்சியில் ஒரு துறவுமடம் இருப்பதாகும், அங்கே சென்று வந்தால் புண்ணியம் கிடக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டது. எனவே அவர்கள் அந்த துறவு மடத்திற்கு சென்றார்கள்.
அவர்கள் சென்ற நேரம் துறவுமடத்தில் ஒரே ஒரு துறவி மட்டும் இருந்தார். அவர் அவர்களுக்கு எல்லா இடங்களையெல்லாம் சுற்றிக்காட்டினார்; உண்பதற்கு உணவு கொடுத்தார். துறவி கொடுத்த விருந்தை அவர்கள் மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அப்படியே பேசிக்கொண்டிருந்ததில் இரவு நேரம் நெருங்கி வந்துவிட்டது. அதனால் அவர் அவர்களை அங்கேயே தங்கச் சொன்னார். துறவியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர்கள் அந்த துறவு மடத்தில் தங்கினார்கள்.
சாம வேலையில் தூக்கத்திலிருந்து எழுந்த துறவி, தன்னை அண்டி வந்த இளைஞர்கள் நன்றாகத் தூக்குகிறார்களா? என்று பார்க்க வந்தார்கள். அங்கே அவர்கள் போர்த்த போர்வையில்லாமல் குளிரில் நடுங்கிகொண்டிருந்தர்கள். அவருக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை. எல்லாருக்கும் போர்த்த போர்வையில்லாத சூழல், குளிர்காயவும் விறகுகள் இல்லாத ஒரு இக்கட்டான் ஒரு சூழ்நிலை. இதையெல்லாம் பார்த்த துறவி, அங்கே இருந்த ஒரு மரத்தால் ஆனா புத்தர் சிலையை உடைத்து, அதில் நெருப்பு மூட்டி, அவர்களைக் குளிர் காயச் சொன்னார். துறவி புத்த சிலையைத் தான் உடைத்து நெருப்பு மூட்டியிருக்கிறார் என்பதை அறிந்த அந்த இளைஞர்கள் அவரைச் சாகும் வரை அடித்துப் போட்டார்கள்.
தங்களுக்காக நல்ல காரியத்தை புரிந்தாலும், அதைப் புரிந்துகொள்ள முடியாத இளைஞர்கள் போக்கு நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. ஆகவே வாழ்வில் எந்த நிலை வந்தாலும் நாம் நம் ஆண்டவரைப் போன்று, தூய மத்தேயுவைப் போன்று இரக்கமுள்ளவர்களாக இருப்போம்.
தூய மத்தேயு கடவுள் தனக்குக் கொடுத்த கொடையை மக்களுக்காகக் கொடுத்து, இரக்கத்தின் கருவியாக விளங்கினார். நாமும் நமது திறமைகளை கடவுளின் மகிமைக்காக, மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவோம். இரக்கத்தின் கருவியாக விளங்குவோம், அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Source: New feed