சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கொணரும் கெடுவை நோக்கிய இறுதி நாட்கள் என்ற தலைப்புடன், ஒத்தக் கருத்துடையோர் பகிர்ந்துவரும் ஒளி-ஒளி செய்தி இணைப்புகளில் தானும் இணைந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
TED எனப்படும் இலாப நோக்கமற்ற பொதுநல அமைப்பின் துணையுடன், பல்வேறு கருத்துக்களை பல்வேறு வல்லுநர்கள் பகிர்ந்துவரும் நிலையில், சுற்றுச்சூழல் நெருக்கடி குறித்து விவாதித்துவரும் குழுவினருக்கு, இச்சனிக்கிழமையன்று செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் மாற்றம் தொடர்புடையவைகளில் நல்லதை நோக்கிய முடிவை எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது என அதில் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு சரியானத் தீர்வுகளைக் காணவேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற தலைப்புடன் உலக அளவில் TED அமைப்பின் கீழ், முயற்சி ஒன்று துவக்கப்பட்டுள்ளதற்கு தன் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, இன்றைய அறிவியல் ஆதாரங்களின்படி, சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து தீர்மானங்களை எடுக்க அதிக நேரமில்லை எனத் தெரிவதாக அதில் கூறியுள்ளார்.
மாற்றங்களையும், நன்மைதரும் நடவடிக்கைகளையும் கொண்ட பயணத்தில், நாமனைவரும் ஒன்றிணைந்து, இன்றைய தலைமுறைகளுக்கு நன்மைதரும், அதேவேளை, வருங்காலத் தலைமுறைக்கு எவ்வித இழப்பையும் ஏற்படுத்தாத ஓர் உலகை அடுத்த பத்தாண்டுகளில் கட்டியெழுப்ப முயலவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் தன் செய்தியில் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Laudato si திருமடலில் கூறியுள்ளதுபோல், நமது பொதுவான இல்லம் குறித்த கல்வியின் அவசியம், மக்களின் நீர் மற்றும் உணவுத் தேவைகள் குறித்த அக்கறை, இயற்கைக்கு ஆபத்தை வழங்காத விவசாய முறைகள், உணவு உற்பத்தியும் விநியோகமும், புதுப்பிக்கவல்ல பொருளாதாரம், ஏழைகளை சுரண்டலும், அவர்கள் குறித்த பாராமுகமும், சரிநிகரற்ற நிலைகளின் அதிகரிப்பு, குறுகிய கண்ணோட்டம் போன்றவை குறித்து, தன் செய்தியில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு சமுதாயமாக, இணக்க உணர்வுடன் நாம் அனைவரும் நல்லுலகை கட்டியெழுப்பும் பயணத்தை இன்றே துவங்குவோம் என அழைப்பு விடுத்து, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed