மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாள்
ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 30ம் தேதியன்று, மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாளும், நட்பின் உலக நாளும் சிறப்பிக்கப்படுவதால், இவ்விரு கருத்துக்களையும் மையப்படுத்தி, திருத்தந்தை, இரு டுவிட்டர் செய்திகளைப் பதிவுசெய்திருந்தார்.
“இன்றைய மனித சமுதாயம் என்ற உடலில், மனித வர்த்தகம் ஒரு காயமாக தொடர்ந்து வருகிறது. விற்பனைப் பொருள்களாக மாற்றப்பட்டுள்ள மனிதர்களை விடுவிக்க உழைத்துவரும் அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். இன்னும் செய்யவேண்டியவை அதிகம் உள்ளது!” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம் பெற்றிருந்தன.
2014ம் ஆண்டு முதல், உலகெங்கும் சிறப்பிக்கப்படும் மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாளுக்கென, இவ்வாண்டு, “மனித வர்த்தகத்தை முடிவுக்குக் கொணர முன்னணியில் இருந்து செயலாற்றுதல்” என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டது.
நட்பின் உலக நாள்
நாடுகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றின் இடையே பாலங்களை எழுப்பும் ஒரு முயற்சியாக, 2011ம் ஆண்டு முதல், ஐ.நா.அவை சிறப்பித்துவரும் நட்பின் உலக நாளுக்கென திருத்தந்தை, இவ்வியாழனன்று, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.
“நட்பு என்பது, வாழ்வின் கொடை, மற்றும் இறைவனின் கொடை. கடினமான நேரங்களில் நம் அருகிலிருக்கும் உண்மையான நண்பர்கள், ஆண்டவரின் பரிவு, ஆறுதல் மற்றும் அன்புநிறை பிரசன்னத்தை பிரதிபலிப்பவர்கள்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
Source: New feed