
மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21
அக்காலத்தில்
இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————-
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா 01 01 2023
I எண்ணிக்கை 6: 22-27
II கலாத்தியர் 4: 4-7
III லூக்கா 2: 16-21
அன்னையின் வழியாக ஆண்டவரின் ஆசி
நிகழ்வு
ஜார்ஜியா நாட்டில், ஒரு மலைப்பாங்கான பகுதியில் கைம்பெண் ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு மகன் இருந்தான். இந்த மகனை இவர் தன் வீட்டை ஒட்டியிருந்த பகுதியில் கோழி வளர்ந்து, அதிலிருந்து கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு, நகரில் இருந்த ஒரு கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். மகனும் தன் தாய் தனக்காகப் படுகின்ற துன்பங்களை உணர்ந்து, நல்லமுறையில் படித்து, அந்தக் கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேறினான். இதைத் தொடர்ந்து கல்லூரியில் பட்டமளிப்பு விழாவானது ஏற்பாடானது. விழாவிற்கு மாணவர்கள் தங்கள் பெற்றோரைக் கட்டாயம் அழைத்து வரவேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லியிருந்தது. இதனால் இவன், கல்லூரியில் இருந்து, மலைப்பாங்கான பகுதியில் இருந்த தன் வீட்டிற்கு வந்து, தாயிடம் எல்லாவற்றையும் சொல்லி, அவரைக் கல்லூரிக்கு வருமாறு சொன்னான்.
“பெரிய பெரிய மனிதர்கள் வரக்கூடிய பட்டமளிப்பு விழாவிற்கு, சாதாராண பெண்மணியாகிய நான், அதுவும் உடுத்துவதற்கு நல்லதோர் ஆடையில்லாத நான் எப்படி வருவது? அப்படி நான் வந்தால், அது உனக்கு அவமானமாக இருக்காதா?” என்று தயங்கினார் தாய். “என்னைப் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தாயாகிய நீங்கள் வருவது எனக்கு எப்படி அவமானமாய் இருக்கும்? நீங்கள் கட்டாயம் பட்டமளிப்பு விழாவிற்கு வரவேண்டும். இல்லையென்றால், நான் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளமாட்டேன்” என்று மகன் உறுதியாகச் சொன்னதால், தாய் அதற்குச் சம்மதித்தார்.
பட்டமளிப்பு விழா நாள் வந்தது. பட்டம் பெறவிருந்த மாணவர்கள் மிகவும் ஆடம்பரமாக உடையணிந்த தங்கள் பெற்றோரோடு அரங்கில் அமர்ந்திருந்தபொழுது, இந்த மாணவன் மட்டும் மிகவும் சாதாரண உடையணிந்த தன் தாயோடு அமர்ந்திருந்தான். எல்லா மாணவர்களுடைய பெயர்களும் வாசிக்கப்பட்டு, அவர்களுக்குப் பட்டமளிக்கப்பட்ட பிறகு, கல்லூரில் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்ற இந்த மாணவனுடைய பெயர் வாசிக்கப்பட்டு, இவனுக்குப் பரிசும் பட்டமும் அளிக்கப்பட்டன. அப்பொழுது இந்த மாணவன், “இந்த பட்டத்தையும் பரிசையும் நான் பெற்றுக்கொள்வதை விடவும், மிகவும் வறிய நிலையில் என்னைப் படிக்கவைத்து, ஆளாக்கிய என் தாய் பெற்றுக்கொண்டால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று சொன்னதும், இவருடைய தாய் மேடைக்கு அழைக்கப்பட்டார். பின்னர் கல்லூரி முதல்வர் இந்தத் தாய்க்குப் பரிசையும் பட்டத்தையும் கொடுத்தபொழுது, அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.
தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் தாயை எல்லார் முன்பாகவும் பெருமைப்படுத்திய அந்த மகனைப் போன்று, மீட்பில் வரலாற்றிலும் இயேசுவின் வாழ்விலும் மிகப்பெரிய பங்காற்றிய மரியாவுக்கு, திருஅவை இன்று ‘கடவுளின் தாய் புனித கன்னி மரியா’ என்ற விழா எடுத்துக் கொண்டாடுகின்றது. இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்திகள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டின் முதல்நாளில் அன்னைக்கு விழா
பொதுவாக நாம் தொடங்குகின்ற எந்தவொரு செயலும் நல்லபடியாக இருக்க, ஆண்டவரின் அருள்வேண்டி நிற்போம். அதுபோன்று பிறக்கின்ற ஒவ்வோர் ஆண்டும் நல்லபடியாக இருக்கத் திருஅவை ஆண்டின் முதல் நாளில் கடவுளின் தாய் புனித கன்னி என்ற விழாவை வைத்து, ஆண்டவரின் அருளை புனித கன்னி மரியா வழியாக இறைஞ்சி நிற்கின்றது.
மரியா, கடவுளின் திருவுளம் நிறைவேறத் தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். இதனால் கடவுள் அவரை எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் – கடவுளின் தாய் – என்று அழைக்கும் சிறப்பினைத் தந்தார் (லூக் 1: 10). அப்படிப்பட்ட அன்னையின் அடிதொட்டு ஆண்டினைத் தொடங்குவது என்பது நமக்குக் கிடைத்திருக்கின்ற ஆசிதான்.
அன்னையின் விழாவில் ஆண்டவர் தரும் ஆசி
எருசலேம் திருக்கோயிலில் பலி ஒப்புக்கொடுத்த பின், குருக்கள் மக்களுக்கு ஆசி வழங்குவதுண்டு. அன்னையின் அடிதொட்டு இந்த ஆண்டைத் தொடங்கியிருக்கும் நமக்கு ஆண்டவர் நமக்கு ஆசி வழங்குகின்றார். அவர் எத்தகைய ஆசிகளை வழங்குகின்றார் என்று இன்றைய முதல் வாசமும், நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
ஆண்டவராகிய கடவுள், மோசே வழியாக ஆரோனுக்கும் அவருடைய புதல்வர்களுக்கும் வழங்கும் ஆசிகளில் வருகின்ற ஒரு சொற்றொடர்: “ஆண்டவர் தம் திருமுகத்தை உன் மேல் ஒளிரச் செய்து, உன்மீது அருள் பொழிவாராக” (எண் 6: 25) என்பதாகும். யூதர்கள் நடுவில் ஆண்டவரின் திருமுகத்தைக் கண்டால், இறந்துவிடுவோம் என்ற எண்ணமானது இருந்தது (தொநூ 32: 31; விப 33: 11; இச 34: 10). இந்நிலையில் ஆண்டவரே தம் திருமுகத்தை நம்மேல் திருப்பி, நம்மீது அருள்பொழிவது எல்லாம் மிகப்பெரிய பேறு என்றுதான் சொல்லவேண்டும்.
அடுத்ததாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில், வயல்வெளியில் ஆடுகளைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத் தோன்றுகின்ற ஆண்டவரின் தூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள்” என்கின்றார். இதுவும் ஆண்டவராகிய கடவுள், அன்னையின் விழாவில் நமக்குத் தருகின்ற மிகப்பெரிய ஆசி என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்கு நம்முடைய வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் நமக்கு அச்ச மூட்டுபவையாகும், திகிலூட்டுபவையாகவும் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் “அஞ்சாதீர்கள்” என்று ஆண்டவர் சொல்வது, நாம் நம்முடைய வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கான ஆற்றலைத் தருகின்றது.
இயேசுவின் வழியில் நடந்து, அன்னைக்குப் பெருமை சேர்ப்போம்
மரியா கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்ததால், கடவுளின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். நாமும் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து அல்லது இயேசு சொல்வதன்படி நடக்க வேண்டும். (யோவா 2: 5) அப்பொழுதுதான் நாம் கடவுளின் ஆசியைப் பெற்றுக்கொள்ள முடியும். அப்படி நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது அல்லது இயேசு சொல்வதன்படி நடப்பதே மரியாவிற்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றது. எவ்வாறெனில், மரியா இயேசுவின் தாயாக இருப்பது மட்டுமல்லாமல், எல்லாருக்கும் தாயாக இருக்கின்றார். அதனால் அவருடைய திருமகனுடைய வழிகளில் நாம் நடக்கின்றபொழுது, நாம் அன்னைக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருக்கின்றோம்.
எனவே, ‘கடவுளின் தாய் புனித கன்னி மரியா’ என்ற விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், மரியாவை நம் முன்மாதிரியாகக் கொண்டு, கடவுளின் வழியில் நடந்து, அன்னை வழியாகக் கடவுள் தருகின்ற ஆசிகளைப் பெற்று மகிழ்வோம்.
Source: New feed