கோவிட்-19 கொள்ளைநோய் முன்வைக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு, உலகளாவிய தோழமையும், ஒத்துழைப்பும் மட்டுமே அவசியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், உலகளாவிய நிறுவனம் ஒன்று நடத்திய கூட்டத்தில் கூறினார்.
IAEA எனப்படும், பன்னாட்டு அணுசக்தி நிறுவனம், செப்டம்பர் 21, இத்திங்களன்று, வியன்னாவில் நடத்திய 64வது பொது அமர்வில் உரையாற்றிய, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், உலகை, அணு ஆயுதங்களிலிருந்து விடுவிக்கவும், உலகில் அணுசக்தி பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படவும், உலகளாவிய சமுதாயத்திற்கு அந்நிறுவனம் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுவரை உலகில் இடம்பெறாத அளவு, உலகைத் தாக்கியுள்ள கொரோனா கொள்ளைநோய், நாடுகளுக்கிடையே நிலவும் சார்புநிலை மீது புதிய ஒளியை வீசியுள்ளது, குறிப்பாக, மக்களின் பொதுவான நல்வாழ்வைப் பொருத்தவரை, நலவாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும், இதற்கு உலக அளவில் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது என்று, பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.
இந்த கொள்ளைநோய் காலத்தில், உலகினரின் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில், பன்னாட்டு அணுசக்தி நிறுவனம் முன்னிலை வகித்து செயல்பட்டு வருவதற்கு திருப்பீடத்தின் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளதோடு, 2020ம் ஆண்டில் இந்நிறுவனம் பல்வேறு தொற்றுக்கிருமிகளை ஒழிப்பதற்கு தொடங்கியுள்ள புதிய முயற்சிகளை ஊக்குவித்துள்ளார், பேராயர் காலகர்.
எபோலா, பறவைக் காய்ச்சல், கோவிட்-19 போன்ற, விலங்குகளிடமிருந்து பரவும் தொற்றுநோய்கள் பரவத்தொடங்கியவுடன், அவற்றைக் கண்டுபிடிக்கவும், அவற்றை விரைவாக ஒழிக்கவும், உறுப்பு நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில், கடந்த ஜூன் மாதத்தில், இந்நிறுவனம் ஆரம்பித்துள்ள Zodiac எனப்படும் புதிய நடவடிக்கையை, பேராயர் காலகர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
உலக அளவில் ஆயுதப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மீது அவநம்பிக்கை உருவாகியுள்ள சூழலைத் தகர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பேராயர் காலகர் அவர்கள், அணு ஆயுதத் தடை மற்றும், அணு ஆயுதக் கட்டுப்பாடு அவசியம் என்பதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாகசாகியில் உரையாற்றியதையும் குறிப்பிட்டார்.
Source: New feed