2020ம் ஆண்டில் கோவிட்-19 கொள்ளைநோயால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் திருப்பலி, அயர்லாந்தின் புகழ்பெற்ற Knock திருத்தலத்தில், நவம்பர் 22, வரும் ஞாயிறன்று நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22, ஞாயிறன்று, அயர்லாந்தின் Tuam உயர்மறைமாவட்ட பேராயர் Michael Neary அவர்களால் Knock விண்ணுலக அரசி மரியன்னை திருத்தலத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் இத்திருப்பலி, வலைத்தொடர்புகள் வழியாகவும், பல்வேறு தொலைக்காட்சி நிலையங்கள் வழியாகவும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.
நம் குடும்பங்களில் உயிரிழந்த அனைவருக்காகவும், இம்மாதத்தில் சிறப்பான விதத்தில் செபிக்கும் அதே வேளையில், நமக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாமல் இருந்தாலும், இவ்வாண்டில், கொரோனா கொள்ளைநோய்க்கு பலியான அனைத்து மக்களுக்காகவும் ஒன்றிணைந்து செபிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார், பேராயர் Neary.
கோவிட்-19 கொள்ளைநோயால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூரும் இத்திருப்பலியில், இணையம் வழியாக பங்குகொள்ளும் அனைவரும், தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட பேராயர் Neary அவர்கள், ஒவ்வொருவரின் விண்ணப்பத்திற்காகவும் இத்திருப்பலியில் இறைவேண்டல் செய்யப்படும் எனவும் கூறினார்.
அச்சம், வருத்தம், மற்றும், நிச்சயமற்ற நிலைகளை உள்ளடக்கியுள்ள இன்றைய காலக்கட்டத்தில், நல்லாயனாம் இயேசு, நம் அனைவரையும் ஒன்றிணைத்து, நம் அச்சங்களை போக்குவார் என்ற நம்பிக்கையுடன் நடைபோடுவோம் என்ற விண்ணப்பத்தையும் வெளியிட்டார் பேராயர் Neary.
1879ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி, அன்னை மரியா தன் வலதுப் பக்கத்தில் புனித யோசேப்பையும், இடப்பக்கத்தில் நற்செய்தியாளர் புனித யோவானையும் கொண்டு அயர்லாந்தின் Knock நகரில் காட்சி கொடுத்ததையடுத்து, இத்திருத்தலம், அயர்லாந்தின் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
Source: New feed