
புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களுக்கு கிறிஸ்மஸ் பேருண்மை என்பது, கடவுள் நம் மத்தியில் இருப்பவராக, கிறிஸ்துவின் உண்மையான தனித்துவத்தின் அடையாளமாக, தீவனத்தொட்டியின் ஏழ்மை மற்றும், எளிமை நோக்கி நம் கண்களைத் திருப்பச் செய்கிறது. நம் பலவீனங்கள், நம் பாவங்கள், மற்றும், இதயத்தின் இறுக்கமான நிலை ஆகியவற்றை அறிந்திருக்கும் கடவுள், புதிதாகப் பிறந்துள்ள குழந்தையாக நம் உலகுக்குள் வந்துள்ள அவர், தமது அன்புப் பிணைப்பால் தம்மிடம் நம்மை ஈர்க்கிறார். இவ்வாறு இயேசுவின் பிறப்பு, சுதந்திரமான, அருள்நிறைந்த மற்றும், உண்மையிலேயே அன்பாதரவற்றவராக கடவுளை வெளிப்படுத்துகிறது. உலகச் செல்வங்கள் மற்றும், அதிகாரம் ஆகியவற்றிலிருந்து முழுவதும் விடுபட்டு மகிழ்வோடு அவரைப் பின்பற்றுவதன் வழியாக, நம் இதயங்களுக்குள் ஆண்டவரை வரவேற்கவேண்டும் எனவும், பாலன் இயேசு போன்று, எதற்கும் ஆசைப்படாமல், கடவுள் நமக்கு அனுப்பும் அனைத்தையும் கடவுளின் அன்புப் பராமரிப்பில் முழுநம்பிக்கை வைத்து, அன்போடு ஏற்கவேண்டும் எனவும் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் நமக்குக் கற்றுத் தருகிறார். பெத்லகேமின் எளிமையான தீவனத் தொட்டி, உலகின் மீட்பரான பெத்லகேம் குழந்தையில் மனுஉருஎடுத்த கடவுளின் எல்லையற்ற அன்பைப் பின்பற்றுவதற்கு நம்மைத் தூண்டுவதாக. கடவுள் நம்மைக் கவர்வதற்கு விரும்பும் வழி அன்பாகும். கடவுளின் அன்பு, தனக்குமட்டுமே உரியது என்ற தன்னலநோக்குடையது அல்ல. அவரது அன்பு, தூய்மையான கொடை, மற்றும், தூய்மையான அருளாகும். அவரது அன்பு அனைத்தும் நமக்காக, நம் நன்மைக்காக உள்ளது.
இவ்வாறு புனித பிரான்ஸ் டி சேல்ஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பேருண்மை குறித்து கூறியிருப்பதை எடுத்துரைத்து இவ்வாண்டின் இறுதி மறைக்கல்வியை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், அமைதியில் திருஅவைக்கு ஆதரவளித்துவரும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு உங்கள் எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல்நலம் மிகவும் குன்றியுள்ள அவருக்கு ஆண்டவர் ஆறுதளிக்குமாறும், தன் வாழ்வின் இறுதிவரை திருஅவை மீதுள்ள அன்புக்குச் சான்றுபகர்வதில் அவரை ஆண்டவர் பேணிக்காக்குமாறும் அவருக்காகச் செபியுங்கள் என்று கூறினார். பின்னர், போரினால் கடுமையாய்த் துன்புறும் உக்ரேனியர்களுக்காகவும், அந்நாட்டில் அமைதி நிலவவும் செபிக்குமாறும் கூறினார் திருத்தந்தை. இறுதியில், புனித கிறிஸ்மஸ் மற்றும், பதிய ஆண்டு, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்வு மற்றும் அமைதியை நிரம்பக்கொணர்வதாக என்று வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார். திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed