மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இறைவேண்டல் பற்றிய நம் மறைக்கல்வித் தொடரில், இன்று, இயேசுவின் வாழ்வு மற்றும் போதனைகளைக் குறித்து நம் சிந்தனைகளைத் திருப்புவோம். தன் பணிவாழ்வை, யோர்தான் நதியில் பெறப்படும் திருமுழுக்கிலிருந்து துவங்கவேண்டும் என ஆவல்கொண்டார் இயேசு. இந்த திருமுழுக்கு நிகழ்வானது, செபம், மற்றும், மனந்திரும்பலில் ஈடுபட்டிருந்த மக்கள் சமுதாயத்தின் நடுவில் இடம்பெற்ற, முக்கியத்துவம் நிறைந்த ஒரு நிகழ்வாகும். பாவமே புரியாதிருந்த இயேசு, அதாவது, என்றும் வாழும் இறைவனின் மகனாகிய இயேசு, புனித திருமுழுக்கு யோவானிடம் இருந்து திருமுழுக்குப் பெற்றது, பாவம் நிறைந்த மனித குலத்தோடு தன் அன்புநிறை ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதன் அடையாளமாகும். புனித லூக்கா நற்செய்தியில் நாம் காண்பதுபோல், இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது, தூய ஆவியார் அவர்மீது இறங்கிவர, வானத்திலிருந்து ஒலித்த வானகத்தந்தையின் குரல், ‘இவரே என் அன்பார்ந்த மகன்’ என அறிவித்தது. நம் திருமுழுக்கில், தூய ஆவியார் வழங்கும் கொடைகளின் வழியாக, இயேசு கிறிஸ்துவுடன், பிள்ளைகளுக்குரிய உரிமையில் நாமும் பங்குதாரர்களாக மாறுகின்றோம். அதே வழியில், நாமும், இயேசுவின் செபத்தில் பங்குபெற ஊக்கம் பெறுகிறோம். வானகத்தந்தையுடன் கொள்ளும் அன்பு உரையாடலின் முடிவற்ற வெளிப்பாடாக, இயேசுவின் செபம் உள்ளது. நம் வாழ்வின் ஒவ்வொரு வேளையிலும், சிலுவையின் பாரத்தையோ, நம் பாவங்களின் பாரத்தையோ உணரும் வேளைகளில்கூட, செபத்தில் நிலைத்திருந்து, இறைவனின் அன்பு குழந்தைகளும், இயேசுவின் சகோதர சகோதரிகளுமாகிய நமக்கு வானுலகக் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.
இவ்வாறு, இயேசுவின் வாழ்வில் இறைவேண்டல் குறித்த மறைக்கல்வி தொடரைத் துவக்கி உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன்று, இயேசுவின் சீடர்கள் புனித சீமோன், மற்றும், புனித யூதா ததேயுஸ் ஆகியோரின் திருவிழா சிறப்பிக்கப்படுவதை நினைவூட்டி, அவர்களைப்போல் நாமும் இயேசுவை நம் வாழ்வின் மையமாக வைத்து, நற்செய்திக்குச் சான்று பகர்பவர்களாக செயல்படுவோம் என்ற அழைப்பை விடுத்தார்.
Source: New feed