திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 05, இவ்வியாழனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், திருஅவையில் கடந்த 12 மாத கால அளவில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும், ஆயர்களின் ஆன்மாக்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.
இயேசு இலாசரை உயர்ப்பித்தது பற்றிக் கூறும் இத்திருப்பலியின் நற்செய்தி வாசகம் குறித்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்’ என இயேசு மார்த்தாவிடம் கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து தன் சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார்.
உயிர்ப்பு என்பது தூரத்தில் தெரியும் கானல் நீர் அல்ல, மாறாக, அது நம்மிடையே குடிகொண்டு செயலாற்றும் ஒன்று என்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும் என இயேசு நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாசரின் இறப்பின்போது, இயேசுவும் ஏனைய மனிதர்களைப்போல் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டபோதிலும், தானே உயிர்ப்பு என்பதன் அடையாளமாக இலாசரை அவர் உயிர்ப்பித்துக் காட்டினார் என்றார்.
நீதிமான்கள் உரிய காலத்திற்குமுன் உயிரிழந்தாலும் இளைப்பாற்றி பெறுவர் ‘(சால.ஞானம் 4:7) என்ற சாலமோனின் ஞானம் என்ற ஏட்டின் வரிகளை நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நூலில் கூறப்பட்டுள்ள ‘தீமை அவரது அறிவுக்கூர்மையைத் திசைதிருப்பாமல் இருக்கவும், வஞ்சகம் அவரது உள்ளத்தை மாசுபடுத்தாமல் இருக்கவுமே அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்'(சால.ஞானம் 4:11) என்ற வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.
இறைப்பற்றில்லாதவர்கள் ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்; ஆனால், ஆண்டவர் அவர்களுக்காக எத்தகைய திட்டம் வகுத்துள்ளார் என்றும், எந்த நோக்கத்திற்காக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளார் என்றும் அறிந்துகொள்ளமாட்டார்கள் (சால.ஞானம் 4:17) என்ற வரிகளையும் சுட்டிக்காட்டி, இவ்வுலகப் பொருட்களே பெரிதென எண்ணுவோர் இறைவனின் திட்டங்களைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுபவர்களாக இருக்கின்றனர் என்றார்.
கடந்த ஓராண்டில் இறந்த கர்தினால்கள் மற்றும், ஆயர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, மரணமே வாழ்வின் முடிவு என்ற தப்பெண்ணத்தை கைவிட்டு, அவர்களின் ஆன்ம நிறைசாந்திக்காகச் செபிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறந்துபோன அன்புள்ளங்களுக்காக நாம் செபிக்கும்போது, அது நம்முடைய இவ்வுலகப் பயணத்திலும் உதவுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வு குறித்த உண்மையான கண்ணோட்டத்தைப் பெறவும், விண்ணுலகச் செல்வங்களைப் பெறும் வழிகளைக் காட்டவும், இச்செபங்கள் நமக்கு உதவுகின்றன என மேலும் கூறினார்.
இறைவனின் விருப்பத்திற்கு இயைந்தபடி நடந்து, எடுத்துக்காட்டான ஒரு வாழ்வை மேற்கொண்டு இறந்த கர்தினால்கள், மற்றும், ஆயர்களின் முன்மாதிரிகையை பின்பற்றி, நம் வாழ்வின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இறைவிருப்பத்திற்கு விசுவாசமாக இருந்து செயல்படுவோமாக, என்று கேட்டு தன் மறையுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த 12 மாதங்களில் திருஅவையில் உயிரிழந்த 6 கர்தினால்கள், மற்றும், 163 ஆயர்களில், தர்மபுரியின் முன்னாள் ஆயர் ஜோசப் ஆண்டனி இருதயராஜ் (29,நவ.2019), வேலூர் ஆயர் சவுந்தராஜ் பெரியநாயகம் (21,மார்ச்,2020), மலேசியாவின் கர்தினால் ஆண்டனி சொட்டேர் பெர்னாண்டஸ் (28,அக்.2020) ஆகியோரும் அடங்குவர்.
Source: New feed