
கிறிஸ்தவர்கள், இருள்படர்ந்த சூழலுக்கு மத்தியில் நம்பிக்கையின் மெழுகுதிரிகளை எரியவிடவேண்டும் என்று, நவம்பர் 13, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட ஆறாவது உலக வறியோர் நாளுக்கென்று வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு இத்தாலி நேரம் காலை பத்து மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் வறியோர், தன்னார்வலர்கள் உட்பட ஏராளமான கத்தோலிக்கருக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்துள்ள மக்களின் வேதனைக் குரலுக்கு கிறிஸ்தவர்கள் செவிமடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
“இயேசு கிறிஸ்து உங்களுக்காக ஏழையானார்” (காண்க.2கொரி.8,9) என்ற தலைப்பில் 6வது வறியோர் உலக நாள் சிறப்பிக்கப்பட்டவேளை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் (லூக். 21:5-19), வழிதவறி நடத்திச்செல்லாதபடி விழிப்பாயிருங்கள், சான்று பகருங்கள் என்ற இயேசுவின் இரட்டை அறிவுரைகளை மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
போர்கள், கடும்எதிர்ப்புகள், நிலநடுக்கங்கள், தொற்றுநோய்கள் போன்ற பயங்கரமான நிகழ்வுகள் நடைபெறும்போது மிதமிஞ்சி கவைலப்படவேண்டாம் என இயேசு தம் சீடர்களிடம் கூறினார் எனவும், உலகின் நிகழ்வுகள் நம்மை அச்சுறுத்தும்போது தோல்வியில் துவண்டுவிடவேண்டாம் என நினைவுபடுத்துவதாக, வரப்போகும் கேடுபற்றிய இயேசுவின் வார்த்தைகள் உள்ளன எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
Source: New feed