இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.
அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 25: 1-13
“எனவே விழிப்பாயிருங்கள்”
நிகழ்வு
அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டு இந்தக் காலக்கட்டத்தில், எந்த நேரத்தில் நாம் தூங்கி எழ நினைகின்றோமா, அந்த நேரத்தை நாம் கடிகாரத்திலோ அல்லது அலைபேசியிலோ பொருத்தி, அதன்படி எழுந்துகொள்ளலாம்; ஆனால், அறிவியலும் தொழில்நுட்பமும் இந்தளவுக்கு வளராத காலக்கட்டத்தில் அல்லது கடிகாரம் கண்டுபிடிக்காத காலக்கட்டத்தில் மக்கள் சேவல் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டே தூங்கி எழுந்தார்கள். இப்படிப்பட்ட காலச் சூழ்நிலையில் நடந்த நிகழ்வு இது.
பெண்மணி ஒருவருக்குப் பெரிய பண்ணை நிலம் ஒன்று இருந்தது. அதில் வேலை பார்ப்பதற்குப் பணியாளர் ஒருவர் இருந்தார். இந்தப் பெண்மணியிடம் சேவல் ஒன்று இருந்தது. இது கூவுகின்ற சத்தத்தைக் கேட்டுத்தான் இவர் விழித்தெழுந்தார். மட்டுமல்லாமல், இதன்பிறகுதான் இவர் தன்னிடத்தில் வேலைபார்த்து வந்த பணியாளருக்கு வேலை கொடுத்து வந்தார். சேவலோ அதிகாலை நான்கு மணிகெல்லாம் கூவி, தன்னுடைய முதலாளி அம்மாவை எழுப்பிவிட, அவர் பணியாளருக்கு அதிகாலையிலேயே வேலை கொடுத்தது, அந்தப் பணியாளருக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவே இல்லை. இதனால் அந்தப் பணியாளர், ‘சேவல்தானே நம்முடைய முதலாளி அம்மாவை அதிகாலையிலயே எழுப்பி, அவர் நம்மை அதிகாலையிலேயே வேலை வாங்குவதற்குக் காரணமாக இருக்கின்றது. இதை நாம் கொன்றுவிட்டால், இன்னும் நன்றாகத் தூங்கி எழலாமே!’ என்று சிந்தித்தார். அவர் இவ்வாறு சிந்தித்ததற்குக் காரணம், அவர் ‘தூக்கப் பிரியராக இருந்தார்’ என்பதால்தான்.
இதைத்தொடர்ந்து ஒரு நாள் இரவு அந்தப் பணியாளர் தன்னுடைய முதலாளி அம்மா தூங்கிக்கொண்டிருந்தபொழுது எழுந்து, சேவலைப் பிடித்துக் கொன்று புதைத்து விட்டார். மறுநாள் காலையில் சேவல் கூவாததால், முதலாளி அம்மா காலை ஏழு மணிக்குத்தான் எழுந்தார். அவர் தூங்கி எழுந்ததும், முதல் வேலையாக, ‘என்ன நாம் இன்றைக்கு இவ்வளவு தாமதமாக எழுந்திருக்கின்றோம்…? இந்தச் சேவலுக்கு என்னவாயிற்று…?’ என்று சேவலைத் தேடியலைந்தார். அப்பொழுது அங்கு வந்த பணியாளர், “நேற்று இரவு நான் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, தற்செயலாக எழுந்து பார்த்தேன். அப்பொழுது காட்டுப் பூனை ஒன்று, நம்முடைய பண்ணையிலிருந்த சேவலைக் கவ்விக்கொண்டு ஓடியது. நான் அதை விரட்டிப் பிடிப்பதற்குள் அந்தக் காட்டுப் பூனை நம்முடைய சேவலை கவ்விக்கொண்டு ஓடிவிட்டது. அதனால்தான் நம்முடைய பண்ணையிலிருந்த சேவலைக் காணவில்லை” என்றார்.
இதைக் கேட்ட முதலாளி அம்மாவிற்கு கோபமாய் வந்தது. இருந்தாலும் அவர் ஒன்றும் செய்ய முடியாதவராய், தன்னுடைய வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர். இதையடுத்து வந்த நாள்களில், முதலாளி அம்மா தாமதமாகத்தான் தூங்கி எழுந்தார். இது தூக்கப் பிரியரான பணியாளருக்கு மிகவும் வசதியாய் இருந்தது. அதனால் அவர் நன்றாகத் தூங்கி எழுந்தார்; ஆனால், சில நாள்கள் மட்டுமே இது தொடர்ந்தது. இதற்குப் பின் வந்த நாள்களில் முதலாளி அம்மா அதிகாலை மூன்று மணிக்கும், இரண்டு மணிக்கும்கூட எழுந்து, பணியாளரை எழுப்பி அவருக்கு வேலை கொடுக்கத் தொடங்கினார். இதனால் அந்தப் பணியாளர், “இதற்கு அந்தச் சேவல் உயிரோடு இருந்திருக்கலாம்’ என்று நொந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பணியாளர் அதிகாலையிலேயே எழுந்து அல்லது விழிப்பாய் இருந்து வேலை பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்ததால், கடைசியில் அவர் தன்னுடைய முதலாளி அம்மாவால் அதிகாலை இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் எழுப்பப்பட்டு வேலை செய்யப் பணிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் வருகின்ற பணியாளரைப் போன்றுதான் பலரும் விழிப்பாகவும், எதற்கும் ஆயத்தமில்லாமலும் இருக்கின்றார்கள். இத்தகையோருக்குக் கிடைக்கும் தண்டனை என்ன…? விழிப்பாய் இருப்போர் இறைவனிடமிருந்து பெறும் வெகுமதி என்ன…? என்பன குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
விழிப்பாய் இருப்போர் பேறுபெற்றோர்
நற்செய்தியில் இயேசு விண்ணரசை மணமகனை எதிர்கொள்ளக் காத்திருக்கும் மணமகளின் பத்துத் தோழியருக்கு ஒப்பிடுகின்றார். இந்தப் பத்துத் தோழியரில் ஐந்து பேர் தங்களுடைய விளக்குகளில் போதிய எண்ணெயுடன் மணமகனை வரவேற்க ஆயத்தமாக இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் முன்முதியுள்ள தோழியர் ஆகின்றார்கள்; மணமகன் வருகின்றபொழுது, அவரோடு திருமண மண்டபத்திற்குள் நுழையும் பேறு பெறுகின்றார்கள்.
இதற்கு முற்றிலும் மாறாக, பத்துத் தோழியரில் மீதமிருக்கும் ஐந்து தோழியர், தங்களுடைய விளக்குகளில் போதிய எண்ணெய் இல்லாமலும், மணமகனை வரவேற்க ஆயத்தமில்லாமலும் விழிப்பாய் இல்லாமல் இருக்கின்றார்கள். இதனால் திடீரென்று மணமகன் வருகின்றபொழுது, இவர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழையும் பேறு பெறாமலே போய்விடுகின்றார்கள்.
ஆம். மானிடமகன் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஆதலால், அவர் வருகின்றபொழுது, அவரை எதிர்கொள்ளும் விதமாய், நாம் நம்முடைய கடமைகளைச் செய்து, விழிப்பாய் இருந்தால், அவர் நமக்குத் தக்க கைம்மாறு தருகின்றார். நாம் நம்முடைய கடமைகளைச் செய்வதன்மூலம் விழிப்பாய் இருந்து, மானிட மகனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்; என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் காத்திருப்பேன் ‘ (மீகா 7:7) என்பார் இறைவாக்கினர் மீக்கா. எனவே, நாம் எந்த நேரத்திலும் வரக்கூடிய மானிடமகனை விழிப்புடன் எதிர்நோக்கி இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed