ஆகஸ்ட் 19 : திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்.

நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22

அக்காலத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

இயேசு அவரிடம், “நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.

அவர், “எவற்றை?” என்று கேட்டார். இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார்.

அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

‘அந்த இளைஞர் வருத்ததோடு சென்றுவிட்டார்’

எல்லா மதத்தவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த அழகிய கிராமம் அது. அந்தக் கிராமத்தில் செல்வம் படைத்த பலர் இருந்தனர். அதே கிராமத்தில் ஓர் ஏழைக் கிறிஸ்தவச் சிறுவன் ஒருவன் இருந்தான். அவனிடம் நல்லதோர் ஆடையோ சரியான காலணியோகூடக் கிடையாது. ஆனாலும் அந்தச் சிறுவன் அது குறித்துப் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஒருநாள் காலைவேளையில் அந்தச் சிறுவன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுகொண்டிருந்தான். போகிற வழியில் எது குறித்தோ மிகத் தீவரமாகப் பேசிக்கொண்டிருந்த அவ்வூரில் இருந்த, பிற சமயத்தைச் சார்ந்த செல்வந்தர்கள் சிலர் அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு அவனோடு ‘விளையாட’ நினைத்தார்கள். எனவே, அந்தக் கூட்டத்திலிருந்த செல்வந்தர்களில் ஒருவர் அவனிடம், “தம்பி இங்கே வா! உன்னிடம் சில வார்த்தைகள் பேசவேண்டும்” என்றார். சிறுவனும் அவருடைய பேச்சுக்கு மதிப்பளித்து, அவரருகே சென்றான்.

அப்பொழுது அந்தச் செல்வந்தர் அவனிடம், “தம்பி! நீ கிறிஸ்தவன் தானே! உங்களுடைய சமயத்தில் நீங்கள் கடவுளை உங்களுடைய தந்தை என்றும் அவர் உங்களைக் கண்ணின் கருவிழி போலப் பாதுகாப்பார் என்றும்தானே சொல்வீர்கள். அப்படிக் கண்ணின் கருவிழி போலப் பாதுகாக்கின்ற உங்கள் தந்தைக் கடவுள், உனக்கு ஏன் ஒரு நல்ல சட்டையோ, காலணியோ கொடுக்காமல் இருக்கின்றார்” என்று நக்கலாகக் கேட்டார். சிறுவன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னான்: “என்னைக் கண்ணின் கருவிழி போலப் பாதுகாக்கின்ற தந்தைக் கடவுள் எனக்கு நல்ல சட்டையும் நல்ல காலணியையும் இன்னும் பிற வசதிகளையும் கொடுத்திருக்கின்றார். ஆனால், அவர் என்னிடம் கொடுக்கவில்லை. உங்களைப் போன்ற செல்வம் படைத்தவர்களிடம் கொடுத்து வைத்திருக்கின்றார். நீங்கள்தான் அதை என்னிடம் தராமல் பதுக்கி வைத்திருக்கின்றீர்கள். இப்பொழுது பிரச்சினை யாரிடமிருக்கின்றது? என்னிடமா? உங்களிடமா?”

செல்வந்தரால் எதுவும் பேசமுடியவில்லை. பின்னர் அவன் அந்தச் சிறுவன் செல்வந்தரிடமிருந்து விடைபெறும்போது, இவ்வாறு சொல்லிவிட்டுப் போனான்: “கடவுள் எல்லாரையும் கண்ணனின் கருவிழி போலப் பாதுகாத்து வருகின்றார். ஆனால், ஒருசிலரோ மற்றவர்கட்குச் சேரவேண்டியதை அபகரித்துக்கொண்டு தாங்கள் மட்டும் வசதி வாய்ப்போடு இருந்துவிட்டு, கடவுளை எல்லாரையும் பராமரிக்க விடாது செய்துகொண்டிருக்கின்றார்கள்.”

மற்றவர்கட்குச் சேரவேண்டியதை அபகரித்துக் கொண்டு வாழ்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் இதுபோன்று மற்றவர்கட்குச் சேரவேண்டியதை அபகரித்துக் கொண்டு வாழ்ந்து வந்த செல்வந்தர் ஒருவர் இயேசுவைப் பின்பற்ற முயற்சி செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வந்தரான இளைஞர்.

நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற செல்வரான இளைஞர் அவரிடம், “போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்யவேண்டும்?” என்று கேட்கின்றார். முதலில் நாம் இந்த இளைஞரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஏனெனில், இவர் தன்னுடைய இளமைப் பருவத்திலேயே ஆண்டவரை – நிலைவாழ்வைத் – தேடவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தார். அப்படிப்பட்டரிடம் இயேசு, கட்டளைக் கடைப்பிடி என்று சொல்கின்றபோது, அவரோ, தன்னுடைய சிறுவயதிலிருந்தே அனைத்தையும் கடைப்பிடித்து வருவதாகச் சொல்கின்றார்.

உண்மையில் அந்தச் செல்வரான இளைஞர் ஒரு கட்டளையைக் கடைப்பிடிக்கவில்லை. அது என்ன கட்டளை? அந்தக் கட்டளையைக் கடைப்பிடிக்காததினால் நிலைவாழ்வை எப்படி இழந்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

‘பிறர்க்குரியத்தைக் கவர்ந்திடாதே’ என்ற கட்டளையைக் கடைப்பிடிக்க மறந்த செல்வந்தர்.

கட்டளையைக் கடைப்பிடித்து வருகிறேன் என்று சொன்ன அந்த செல்வரான இளைஞர், ‘பிறர்க்கு உரியதைக் கவர்ந்திட விரும்பாதே’ (விப 20: 17) என்ற கட்டளையைக் கடைப்பிடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அவர் செல்வந்தராய் இருந்தார். அப்படிப்பட்டவரிடம் இயேசு, “உம் உடைமைகளை விற்று ஏழைட்குக் கொடும்” என்று சொல்கின்றபோதும் அவர் அதை விற்கத் தயாராக இல்லை. அதனால் அவர் இயேசுவின் சீடராகவும் நிலைவாழ்வையும் பெறமுடியாமல் போகின்றார்.

இயேசு கூறுவது போல், எவரும் இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்ய முடியாது (மத் 6: 24). இந்த மனிதர் தன்னிடம் இருப்பதை இழக்க விரும்பாமல், இயேசுவைப் பின்பற்ற நினைத்ததால், அது சாத்தியப்படாமல் போகவே, மிக வருத்ததோடு சென்றார். நாம் இயேசுவைப் பின்பற்றுகின்றோம் எனில், நம்மிடம் இருப்பதை இழப்பதற்குத் தயாராகவேண்டும். அப்பொழுது நாம் இயேசுவின் உண்மையான சீடராக முடியும் நிலைவாழ்வையும் பெற்றுக்கொள்ள முடியும்.

சிந்தனை.

‘செல்வதற்குத்தான் செல்வம்’ என்பர். ஆகையால், நம்மிடம் இருக்கின்ற செல்வத்தை பிறர்க்கு கொடுத்து உதவவும் பகிர்ந்து வாழவும் முன்வருவோம். அதன்வழியாக இயேசுவின் உண்மையான சீடர்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Source: New feed