அணு ஆயுதங்கள் இன்றைய மனித சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதை, திருப்பீடம், உலக அவைகளில் வலியுறுத்தி வருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவை கூட்டமொன்றில் கூறினார்.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அணு ஆயுதங்களின் பெருக்கம் குறித்து, ஏப்ரல் 30, இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
அணு ஆயுதங்களை தடுப்பதற்கு, 2017ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி முன்வைக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தில் திருப்பீடமும் கையொப்பமிட்டது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், அதற்கு முன்னதாக வெவ்வேறு காலக்கட்டங்களில் முன்வைக்கப்பட்ட மூன்று ஒப்பந்தங்கள் குறித்தும் தன் உரையில் எடுத்துரைத்தார்.
உலக அரசுகள், அணு ஆயுதங்களை, தங்கள் கிடங்குகளில் அடுக்கி வைத்திருக்கும் வரையிலும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.
அண்மைய சில மாதங்களாக, கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும், அச்சமூட்டும், நிலையற்ற, சூழலை தன் உரையில் நினைவுகூர்ந்த பேராயர் அவுசா அவர்கள், வட மற்றும் தென் கொரிய மக்களின் முன்னேற்றங்களைப் பின்னுக்குத் தள்ளி, அங்கு அணு ஆயுதங்களின் பெருக்கம் உருவாவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்று கூறினார்.
உலக வல்லரசுகள், அணு ஆயுதங்களை வைத்திருப்பதும், அவற்றைப் பராமரிப்பதும், நாடுகளுக்கிடையே நிலவவேண்டிய நம்பிக்கையைக் குலைக்கிறது என்பதைக் கூறிய பேராயர் அவுசா அவர்கள், அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் இணைந்து மதிப்பதை, திருப்பீடம் முழு மூச்சுடன் ஆதரிக்கிறது என்று கூறி, தன் உரையை நிறைவு செய்தார்