உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-7
அக்காலத்தில்
ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————
“இருளில் பேசியவை ஒளியில் கேட்கும்”
நிகழ்வு
ஒரு நகரில் சபைப் போதகர் ஒருவர் இருந்தார். நற்செய்தி அறிவிப்பின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவருக்குப் பதினொரு வயதில் மகன் ஒருவன் இருந்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலைவேளையில், மகன் தன் தந்தையிடம், “அப்பா! நான் வெளியே சென்று வருகிறேன்” என்றான். “மகனே! வெளியே மழை பெய்துகொண்டிருக்கின்றது; இந்த நேரத்தில் நீ வெளியே சென்றால், அது அவ்வளவு நல்லது கிடையாது” என்று தடுத்தார் அவனுடைய தந்தை. “அப்பா! நான் என்றைக்காவது உங்களிடத்தில், ‘வெளியே போய் வருகிறேன்’ என்று கேட்டிருக்கின்றேனா…? இன்றைக்கு எனக்கு வெளியே போகவேண்டும் என்று தோன்றுகின்றது. அதனால் நான் வெளியே போவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்” என்றான்.
மகன் இப்படிக் கேட்டபிறகு அவனது தந்தையால் மறுக்க முடியவில்லை. “வெளியே போவது சரி; ஆனால் மழை ஆடையை அணிந்துகொள். அப்பொழுதும் உனக்கு ஏதும் ஆகாது” என்றார் தந்தை. இதற்குப் பிறகு மகன் மழை ஆடையை அணிந்துகொண்டு நடக்கத் தொடங்கினான். சாலையோரமாய் இரண்டு மணி நேரங்கள் நடந்திருப்பான். பொழுது நன்றாக இருட்டியிருந்தது. ஓரிடத்தில் தனியாக ஒரு வீடு இருப்பதைக் கண்டான். நேராக அந்த வீட்டின் முன்பாகச் சென்று, கதவைத் தட்டினான் அவன். கதவை யாருமே திறக்கவில்லை. மீண்டுமாகக் கதவைத் தட்டினான் அவன்.
அப்பொழுது பெண்மணி ஒருவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். அவரிடத்தில் அவன், “அம்மா! நான் உங்களிடத்தில் மிகவும் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லப்போகிறேன்!” என்றான். “சொல் மகனே!” என்று அவர் அவன் என்ன சொல்வதைக் கேட்க, மிக ஆவலாய் இருக்க அவன், “அம்மா! இயேசு உங்களை மிகவும் அன்பு செய்கிறார்” என்று சொல்லிவிட்டு அவருடைய கன்னத்தில் முத்தமிட்டான்.
‘இந்த உலகத்தில் தன்னை அன்பு செயவதற்கு ஆள் இல்லை’ என்று வாழ்க்கையே வெறுத்து, தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த அந்தப் பெண்மணிக்கு, சிறுவன் சொன்ன வார்த்தைகள், வாழ்க்கையின்மீது நம்பிக்கையை ஊட்டின. இதற்குப் பிறகு அந்தப் பெண்மணி, அந்தச் சிறுவன் யார்? அவனுடைய இருப்பிடம் என்ன? என யாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டுவிட்டு, அவனை அன்போடு உபசரித்து அனுப்பினார்.
இது நடந்து சரியாக ஒரு வாரம் கழித்து, சிறுவனின் தந்தையும் சபைப் போதகருமானர், சபையில் நடந்த ஞாயிறுவழிபாட்டில், “இந்த வாரம் யாராவது சாட்சி சொல்லப்போகிறீர்களா?” என்று கேட்க, சபைக்குப் புதிதாக வந்திருந்த அந்தப் பெண்மணி எழுந்து, “பிள்ளைகளாலும் உறவுகளாலும் கைவிடப்பட்ட நான், வாழ்க்கையே வெறுத்துப் போய்க் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலைவேளையில் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தேன். அப்பொழுதுதான் உங்களுடைய மகன் என்னுடைய வீட்டின் கதவைத் தட்டி, ‘இயேசு உங்களை மிகவும் அன்பு செய்கிறார்’ என்றான். அவ்வார்த்தைகள் என்னை அன்பு செய்ய இயேசு இருக்கின்றார் என்ற புதிய நம்பிக்கையை ஊட்டின. அதனால் நான் அப்பொழுதே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, இன்று இங்கு வந்திருக்கின்றேன்” என்றார். அந்தப் பெண்மணி இவ்வாறு சொல்லி முடித்ததும், சபையில் இருந்த எல்லாரும் கைகளைத் தட்டி ஆண்டவருக்கு நன்றி சொன்னார்கள்.
இந்த நிகழ்வில் வரும் சபைப் போதகரின் மகன், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருந்த பெண்மணிக்கு ‘இயேசு உங்களை மிகவும் அன்பு செய்கின்றார்’ என்பதை இருளில் பேசியிருந்தான்; ஆனால், அது மறுவாரத்தில் எல்லாரும் ஒளியில் கேட்கும்படி ஆனது. இன்றைய நற்செய்தியில் இயேசு, “நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் வார்த்தைக்கு யாரும் அணைக்க முடியாது!
நற்செய்தி வாசகத்தில் இயேசு, யாருக்கும் அஞ்சாமல், கடவுளின் வார்த்தையை அறிவிக்கவேண்டும் என்ற செய்தியை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றார். கடவுளின் வார்த்தை ஒரு சிறிய குழுவில் அல்லது இருளில் அறிவிக்கப்பட்டால் கூட அது என்றாவது ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும் என்று கூறும் இயேசு, கடவுளின் வார்த்தைக்கு யாரும் அணைகட்ட முடியாது. அதனால் அதைச் சீடர்கள் யாருக்கும் அஞ்சாமல் அறிவிக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு முன்பாக இயேசு பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், திருச்சட்ட அறிஞர்கள் ஆகியோரைக் கடுமையாகச் சாடியிருப்பார். இவர்களைப் போன்றோர்களால் கடவுளின் வார்த்தையை அறிவிக்கின்றவர்களுக்கு ஆபத்து வரும்; அதனால் இவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று சொல்லும் இயேசு, யாருக்கும் அஞ்சாமல், துணிவோடு கடவுளின் வார்த்தையை அறிவிக்கவேண்டும். அப்படிக் கடவுளின் வார்த்தையை அறிவிப்போருக்கு கடவுளின் பாதுகாப்பு என்றுமே உடனிருக்கும் என்கின்றார்.
நாம் கடவுளின் வார்த்தையை அறிவிக்கின்றோமா? அதுவும் யாருக்கும் அஞ்சாமல் துணிவுடன் அறிவிக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்’ (எரே 1: 8) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு அவருடைய வார்த்தையைத் துணிவோடு எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed