ப்ரோக்னே நகர தூய கெரார்ட்

கடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக் கிடைப்பது அவரிடமிருந்தே; உண்மையாகவே என் கற்பாறையும் என் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன்” (திப 61:1-2)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் கெரார்ட், 895 ஆம் ஆண்டு, பெல்ஜியத்தில் உள்ள ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் வளர்ந்து பெரியவராகியபோது இராணுவத்தில் சேர்ந்து, தீரமிக்க ஓர் இராணுவ வீரர் ஆனார். இவரிடத்தில் இருந்த திறமையையும் சாதுர்யத்தையும் ஞானத்தையும் கண்டு, அரசர் இவரைத் தன்னுடைய அரசபையில் ஓர் அங்கத்தினராக ஏற்படுத்தினார். இப்படி இவருடைய வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்தது.

917 ஆம் ஆண்டில் ஒரு நாள் இவர் பாரிசிற்குச் சென்றார். அங்கு இவர் செயின்ட் டெனிஸ் என்ற இடத்தில் இருந்த ஆசிர்வாதப்பர் சபைத் துறவிகளுடைய ஜெப தவ வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, தானும் அவர்களைப் போன்று மாறவேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே தன்னுடைய பதவி, சொத்து, சுகம் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அடுத்த ஏழு ஆண்டுகளில் துறவியாகவும் மாறினார்.

துறவியாக மாறியபின்பு கெரார்ட் தன் நேரத்தை எல்லாம் ஜெபத்திலும் தவத்திலும் செலவழித்தார்; துறவற மடத்தில் இருந்த மற்ற துறவிகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய் விளங்கினார். இவ்வாறு அவருடைய வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போது, ப்ரோக்னே என்ற தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். அங்கு அவர் ஆசிர்வாதப்பர் சபை ஒழுங்குகளை அடிப்படையாக வைத்து, ஒரு துறவற மடத்தைத் தொடங்கினார். அதில் ஏராளமான இளைஞர்கள் உறுப்பினர்களாக வந்து சேர்ந்தார்கள். கெரார்ட் அவர்களுக்கு சபை ஒழுங்குகளை எடுத்துச் சொல்லி, நல்ல துறவிகளாக வாழ ஊக்கப்படுத்தினார். அவர்களுக்கு அவர் சொன்னதைக் கேட்டு, துறவற வாழ்வில் மேலோங்கி வந்தார்கள்.

கெரார்ட் தன்னுடைய கடைசி நாட்களை ஜெபத்திலும் தவத்திலும் அதிகமாக செலவழித்தார். 959 ஆம் ஆண்டு, அக்டோபர் 3 ஆம் நாள், அவர் தன்னுடைய ஆன்மாவை இறைவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

ப்ரோக்னே நகர தூய கெரார்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஆண்டவரைத் தேடுவோம், வாழ்வடைவோம்

தூய கெரார்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நமது நினைவுக்கு வந்து போகின்றது. அவர் தனது நிம்மதியை அதிகாரம், அந்தஸ்து இப்படி பலவற்றில் தேடினார். ஆனால் எதுவுமே அவருக்கு நிம்மதியைத் தரவில்லை. கடைசியில் இயேசுதான் அவருக்கு நிம்மதியைத் தந்தார். திருத்தததை பதினாறாம் ஆசிவாதப்பர் கூறுவார், “இயேசு கிறிஸ்துவில் வெளிப்பட்ட கடவுளின் அன்பினில் அன்றி, ஒருவர் வேறு எதிலும் தன்னுடைய வாழ்விற்காக அர்த்தத்தைப் பெறமுடியாது”. இது உண்மை. இந்த உண்மையை உணர்ந்து, யார் ஒருவர் இயேசுவைத் தேடுகின்றாரோ, அவர் தன்னுடைய வாழ்வின் அர்த்தத்தை நிச்சயம் கண்டுகொள்வார்.

ஆனால், இன்றைக்கு நிலைமை வேறொன்றாக இருக்கின்றது. மனிதர்கள் இன்று பணமும் அதிகாரமும் ஆள்பலமும்தான் நிம்மத்தியைத் தரும் என்று அவற்றுக்குப் பின்னால் போய்க்கொண்டிருக்கின்றார்கள். அவையெல்லாம் ஒருவருக்கு நிம்மதியைத் தராது என்பதுதான் வேதனை கலந்த உண்மை.

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சொத்து, சுகம், அதிகாரம், அந்தஸ்து என்று எல்லாமும் இருந்தது. நிம்மதிதான் தான் இல்லை. நிம்மதிக்காக அவன் என்னவெல்லாமோ செய்துபார்த்தான். எதுவும் அவனுக்கு நிம்மதியைத் தரவில்லை. இந்த நேரத்தில் அரசனைப் பார்க்க துறவி ஒருவர் வந்தார். அவரிடத்தில் அவன் தன் நிலைமையை எடுத்துச் சொன்னான். அதற்கு அவர், “நிம்மதியாக இருக்கின்ற ஒருவருடைய சட்டையை வாங்கி அணிந்துகொள், உனக்கு நிம்மதி கிடைக்கும்” என்றார். துறவியின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்க்கொண்டு, அரசன் தன்னுடைய படைவீரகளை நாலாபக்கமும் அணுகி, நிம்மதியாக இருக்கின்ற மனிதருடைய சட்டையை வாங்கிவரச் சொன்னார். படைவீரர்களும் நீண்ட நாட்களாகத் தேடினார்கள். ஆனால் யாரும் நிம்மதியாக இருந்ததாகத் தெரியவில்லை.

நீண்டநாட்களுக்குப் பின், படைவீரர்கள் நிம்மதியாக இருக்கின்ற மனிதர் ஒருவரைக் கண்டார்கள். அவர் ஒரு தெருவோர பிச்சைக்காரர். அவரிடத்தில் அவர்கள், “நீ நிம்மதியாக இருக்கின்றாயா?” என்று கேட்டார்கள். அவரும், “ஆம், நான் நிம்மதியாக இருக்கின்றேன்” என்றார். உடனே படைவீரர்கள் அவனிடம், “உன்னுடைய சட்டையைத் தா, அரசர் கேட்கிறார்” என்றார்கள். அதற்கு அந்தப் பிச்சைக்காரர், “என்னிடத்தில் சட்டையே கிடையாது” என்று சத்தமாகச் சிரித்தார். படைவீரர்களுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. பின்னர் அவர்கள் நடந்ததை அரசரிடத்தில் வந்து சொல்ல, அவன் மிகவும் வருத்தமுற்றான்.

நிம்மதியை எதில் எல்லாமோ தேடிய அரசனைப் போன்றுதான், இன்றைக்கு நாம் நிம்மதியைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் தேடும் நிம்மதியை, மகிழ்வான வாழ்வை இயேசுவைத் தவிர வேறு யாராலும் தரமுடியாது.

ஆகவே, இன்று நாம் நினைவுகூரும் கெரார்ட்டைப் போன்று உண்மையான மகிழ்ச்சியை, நிம்மதியை இயேசுவில் தேடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.