பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (05. 02. 2023)

I எசா 58: 7-10
II 1 கொரி 2: 1-5
III மத் 5: 13-16)
இருளில் ஒளியென மிளிர்வர்!
பசித்தோர்க்கு உதவிடும் மூதாட்டி:
பிழைக்க வந்த இடத்தில், தான் பிழைத்தது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் பிழைக்க வைக்கும் மூதாட்டி ஒருவர் இருக்கின்றார். அவர்தான் காந்திமதி என்ற மூதாட்டி.
வெறும் இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் காந்திமதி மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரைச் சேர்ந்தவர். இவர் பிழைப்பதற்காகத் தன் குடும்பத்தோடு மதுரையில் உள்ள கீழமாசி வீதிக்கு வந்திருக்கின்றார். அங்கு இவர் தன் நான்கு பிள்ளைகளுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தந்துவிட்டு, மீதமுள்ள நாள்களை என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு, ‘கைவிடப்பட்ட ஏழைகள், அனாதைகள், மாற்றுத் திறனாளிகள், பிச்சைக்காரர்கள் யாவருக்கும் நாம் ஏன் ஒருவேளையாவது உணவிடக் கூடாது?’ என்ற எண்ணம் உதித்தது
இதைத் தொடர்ந்து இவர் மேலே குறிப்பிடப்பட்ட மக்களுக்கு ஒருவேளை உணவு வழங்கத் தொடங்கினார். இன்றைக்கு இவரது உதவியால், இவர் வாழும் பகுதியில் எழுபத்துக்கும் மேற்பட்டோர் வயிறார உணவு உண்கின்றார்கள். இவரது இந்த நல்ல மனத்தைப் பார்த்துவிட்டுப் பலரும் தங்களால் முடிந்த அளவு பண உதவியையும், பொருள் உதவியையும் தருகின்றார்கள். தவிர, மக்கள் இவரை ‘அன்ன பூரணி’ என அன்போடு அழைக்கின்றார்கள்.
பிறரின் துன்பத்தைத் தன்னுடைய துன்பத்தைப் போன்று உணர்ந்து, அதைப் போக்க முயல்பவரே மிக உயர்ந்த மனிதர். அந்த அடிப்படையில், மக்கள் உணவின்றி வாடுவதைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவளித்துக்கொண்டிருக்கும் காந்திமதி என்ற ‘அன்னபூரணி’ உண்மையில் மிக உயர்ந்தவர்.
பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம்மை இருளில் ஒளியென மிளிர நமக்கு அழைப்புத் தருகின்றது. நாம் எப்படி இருளில் ஒளியென மிளிர்வது என்பது குறித்துச் சிந்திப்போம்.
ஏன் மன்றாட்டு கேட்கப்படுவதில்லை?
“கடவுள் தங்கள் மன்றாட்டைக் கேட்பதில்லை!” என்று ஒருசிலர் குறைபட்டுக் கொள்வதுண்டு. எதற்காகக் கடவுள் தங்கள் மன்றாட்டைக் கேட்பதில்லை? என்று அவர்கள் எப்போதாவது ஆற, அமர யோசித்துப் பார்த்தால், யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுகின்ற, “நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில், நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள். சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கின்றீர்கள்” என்பதே பதிலாக வரும்.
இஸ்ரயேல் மக்களில் ஒருசிலர் இப்படித்தான் தங்கள் உடலை ஒறுத்து, கடவுளிடம் மன்றாடியபோதும், அவர் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கவில்லை என்று முறையிட்டார்கள். அப்போது கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, உடலை வருத்தி நோன்பிருப்பது மட்டும் உண்மையான நோன்பு அல்ல, மாறாக, பசித்திருப்போர்க்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாதவரை இல்லத்திற்கு அழைத்து வருவதும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும்தான் உண்மையான் நோன்பு. இம்மாதிரியாய் நோன்பிருக்கும்போது அவர்களின் மன்றாட்டு கேட்கப்படும்; நலமான வாழ்வு துளிர்க்கும்; வாழ்க்கை இருளில் ஒளியென மிளிரும் என்கிறார். இதைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
சிலுவையைப் பற்றி அறிவி
உண்மையாய் நோன்பிருக்கும்போது மட்டுமே ஒருவரது மன்றாட்டு கேட்கப்படும்; நலமான வாழ்வு துளிர்க்கும்; இருளில் ஒளியென மிளிர முடியும் என்பது இறைவார்த்தை சொல்லும் செய்தி. இந்த உண்மை எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இதனை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும். அது ஒவ்வொருவருடைய தலையாய கடமை. ஏனெனில், பவுல் சொல்வது போல, “அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும்” (உரோ 10: 17).
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் இயேசுவைப் பற்றி, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட மெசியாவாம் இயேசுவைப் பற்றி அறிந்து, அறிவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றார்.
“மரத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (இச 21: 23) என்பது யூதர்கள் நடுவில் இருந்த நம்பிக்கை. இந்நிலையில் பவுல், “சிலுவை, அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ, அது கடவுளின் வல்லமை” (1 கொரி 1: 18) என்று சொல்லிவிட்டு, “நான் உங்களிடையே இருந்தபோது, மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை” என்கிறார்.

Source: New feed