புனிதர்கள் பேதுரு, பவுல் நம்பிக்கையில் வளர கற்றுக்கொடுக்கின்றனர

நம் கிறிஸ்தவ நம்பிக்கைப் பயணம் நிறைவற்றதாக இருந்தாலும்கூட, ஆண்டவரில் நம் நம்பிக்கையை எப்போதும் அதிகரிப்பதற்கும், அவருக்கு நெருக்கமாக இருப்பதில் வளர்வதற்கும் தேவையான வழிமுறைகளைக் கற்றுத்தருமாறு, புனிதர்கள் பேதுரு மற்றும், பவுலிடம் இறைஞ்சுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் நண்பகல் மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

ஜூன் 29 இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட, உரோம் நகரின் பாதுகாவலர்களான  திருத்தூதர்கள் பேதுரு, மற்றும், பவுல் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நண்பகலில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தூதர்கள் பேதுருவும், பவுலும், ஆண்டவர் மீதுள்ள தங்களின் நம்பிக்கையில் எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும், குறைகள் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இயேசுவுக்கு நெருக்கமாக இருப்பதில் வளர்வதற்கு நாம் மேற்கொள்ளும் போராட்டங்களை இத்திருத்தூதர்களின் போராட்டங்களோடு தொடர்புபடுத்தலாம் என எடுத்துரைத்தார்.

“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என பேதுரு இயேசுவிடம் கூறிய இப்பெருவிழாவின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மூவேளை உரை வழங்கிய திருத்தந்தை, மீனவரான சீமோன், பின்னர் பேதுரு என அழைக்கப்பட்டார், இதுவே அவரின் பயணத்திற்குத் தொடக்கமாக இருந்தது என்றும், பேதுரு உரைத்த வார்த்தைகள் அவரது வாழ்வில் ஆழமாக வேரூன்றுவதற்கு நீண்டகாலம் எடுத்தது என்றும் கூறியுள்ளார்.

பல கிறிஸ்தவர்கள் எதிர்கொள்கின்ற ஒரு நம்பிக்கைப் பயணத்தைப் போலவே திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் நம்பிக்கைப் பயிற்சிப் பயணமும் இருந்தது என்று உரைத்த திருத்தந்தை, நாமும், இயேசுவே மெசியா, வாழும் கடவுளின் மகன் என்று நம்புகிறோம், ஆயினும், நற்செய்திக்கு முழுவதும் ஏற்றவகையில் சிந்திக்கவும், செயல்படவுமான நம் பாதைக்கு பொறுமை, மற்றும் தாழ்ச்சி அதிகம் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.