நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 21)

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் புதன்கிழமை
லூக்கா 12: 39-48
“பொறுப்புள்ளவர்களாய் இருப்போம்”
நிகழ்வு
“Bites& Pieces” என்ற சஞ்சிகையில் வந்த நிகழ்வு இது. பிரபல மருத்துவமனை ஒன்றில் வயதான ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தன் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குவளையை எடுத்துத் தண்ணீர் அருந்தும்பொழுது, கை இடறித் தண்ணீர் முழுவதும் கீழே கொட்டிவிட்டது. நல்லவேளை! தண்ணீர்க் குவளைக்கு எதுவும் ஆகவில்லை; ஆனால், கீழே சிந்திக் கிடந்த தண்ணீரில் தெரியாமல் காலை வைத்தால், வழுக்கி விடும் என்பதால், அதைத் துடைத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.
இப்படி அவர் நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது அவருடைய அறைக்குள் செவிலியர் ஒருவர் வந்தார். அவரிடம் நடந்தையெல்லாம் சொல்லி, “கீழே சிந்திக் கிடக்கும் தண்ணீரைத் துடைக்க முடியுமா?” என்றார். இதைக் கேட்டு அந்தச் செவிளியருக்குக் கடுஞ்சினம் வந்தது. “தண்ணீர் சிறிய அளவில் கொட்டியிருந்தால் மட்டுமே அதைத் துடைப்பது என்னுடைய பொறுப்பு. தண்ணீர் பெரியளவில் கொட்டியிருக்கின்றது. அதனால் இதைத் துடைப்பது என்னுடைய பொறுப்பு கிடையாது; மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் பொறுப்பு” என்றார்.
இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் மருத்துவமனை நிர்வாகத்தின்கீழ் பணிபுரிந்துவந்த துப்புரவுப் பணியாளர் ஒருவர் அங்கு வந்தார். அவரிடத்தில் நோயாளர் நடந்ததைச் சொல்லி, கீழே சிந்திக் கிடக்கும் தண்ணீரைத் துடைக்க முடியுமா?” என்றார். அவர் கீழே சிந்திக் கிடந்த தண்ணீரை ஒருவினாடி பார்த்தார். “தண்ணீர் பெரியளவில் சிந்தியிருந்தால், நானே துடைத்திடுவேன்; ஆனால் தண்ணீர் சிறியளவில்தான் சிந்தியிருக்கின்றது. அதனால் இதைத் துடைப்பது செவிலியரின் பொறுப்பு” என்றார்.
“இல்லை. தண்ணீர் பெரியளவில்தான் சிந்தியிருக்கின்றது. இதைத் துடைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது” என்று சீறீனார் செவிலியர். “இல்லை, இல்லை. தண்ணீர் சிறியளவில்தான் சிந்தியிருக்கின்றது. அதனால் இதைத் துடைக்கவேண்டிய பொறுப்புதான் உங்களுடையது” என்று பதிலளித்தார் துப்புரவுப் பணியாளர். இப்படி அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த வயதான நோயாளர், தனக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு தண்ணீர்க் குவளையை எடுத்து, அதிலிருந்த தண்ணீரையெல்லாம் கீழே கொட்டி, “இப்பொழுது கீழே கொட்டிக் கிடக்கும் தண்ணீரைத் துடைப்பது யாருடைய பொறுப்பு என்பதை நீங்களே முடிவு கொள்ளுங்கள்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் இருவரும் பேயறைந்தவர்கள் போல் நின்றார்கள்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இன்றைக்குப் பலர் பொறுப்பைக் கையில் எடுப்பதற்கும், கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையாய், நேர்மையாய் இருப்பதற்கும் மிகவும் யோசிக்கத்தான் செய்கின்றார்கள். இத்தைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகம், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ள பணியாளராக இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யார் நம்பிக்கைக்குரிய, அறிவாளியான பொறுப்பாளர்?
மானிட மகனுடைய வருகைக்காக விழிப்பாய் இருக்கவேண்டும் என்று சொல்லும் இயேசு, அந்த உண்மையை விளக்க, வீட்டுப் பொறுப்பாளர் உவமையை எடுத்துச் சொல்கின்றார்.
ஒரு நல்ல, நம்பிக்கைக்குரிய, அறிவாளியான யாரெனில், தன்னிடம் ஒப்படைக்பட்ட பொறுப்புகளை நல்லமுறையில் செய்து, தனக்குக் கீழ் உள்ள பணியாளர்களோடு இணக்கமாகவே இருப்பவே ஆவார். அப்படிப்பட்டவர் தலைவரிடமிருந்து நல்லதொரு கைம்மாறு பெறுவார். இங்கு வீட்டுப் பொறுப்பாளர் என்பதை இறைமக்களின் தலைவர்களாக இருக்கின்ற திருஅவையின் தலைவர்களோடும், இல்லத் திருஅவையின் தலைவராக இருக்கும் கணவரோடும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை நல்ல முறையில் செய்து, தங்களோடு வாழும் மனிதர்களோடு இணக்கமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால், அவர்கள் தலைவராம் இயேசுவிடமிருந்து மிகுந்த கைம்மாறு பெறுவார்கள்.
மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடமிருந்து மிகுதியாக எதிர்பார்க்கப்படும்
வீட்டுப் பொறுப்பாளர் நம்பிக்கைக்குரியவராய், அறிவாளியாய் இருக்கும் பட்சத்தில் அவர் தலைவரிடமிருந்து மிகுந்த கைம்மாறு பெறுவார் என்று சொல்லும் இயேசு, அதே பொறுப்பாளர் நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல், அறிவிலியாய் இருந்தால் அவர் அதற்குரிய தண்டனையைப் பெறுவார் என்கின்றார். இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவர் செயல்களுக்கு ஏற்பவே கைம்மாறு கிடைக்கும் என்பதை இயேசு சொல்லாமல் சொல்கின்றார்
இயேசுவின் சீடர்களாகிய நம்மிடத்தில் ஒவ்வொரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் ஒருசிலருக்கு மிகுதியாகவே பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பொறுப்பைக் கொண்டு நாம் மிகுதியான பலனைத் தரவேண்டும். அதுவே இறைவனின் திருவுளமாகும். நாம் நக்மகுக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய், உண்மையாய் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள்’ (1 பேது 5: 3) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் நம்மிடம் ஒப்படைக்கபட்டவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து, கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.