திருத்தந்தை – அன்புக்கு சான்றுகளாக திகழுங்கள்

CHARIS எனப்படும், உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை இயக்கத்தின் ஏறத்தாழ ஆறாயிரம் பிரதிநிதிகளை, ஜூன் 08, இச்சனிக்கிழமை நண்பகலில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை இயக்கமும், கத்தோலிக்க உடன்பிறந்த அமைப்பும், கடந்த முப்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் நற்பணிகளுக்கு, உலகளாவிய திருஅவையின் பெயரில், முதலில் நன்றி சொல்வதாகத் தெரிவித்தார், திருத்தந்தை.

52 ஆண்டுகளுக்கு முன்னர், கத்தோலிக்க அருங்கொடை இயக்கம் தொடங்கப்பட்டதுடன், பெந்தக்கோஸ்து பெருவிழா, ஒரு புதிய தளத்தை ஆரம்பித்தது என்று கூறியத் திருத்தந்தை, புதிது, தனித்தன்மை வாய்ந்தது, பணி, குழுமஒன்றிப்பு ஆகிய நான்கு தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மனிதக் கண்ணோட்டத்தில், புதிதாக இருப்பவை பற்றிய அச்சம் எழுவது, சாதாரணமானதுதான், ஆனால், இதில், ஆன்மீகத்தில் ஆழ்ந்துள்ளவர்களின் நிலை வித்தியாசமானது, ஏனெனில், கடவுள் வழங்கும் புதியன அனைத்தும், அவரின் அன்பு இதயத்திலிருந்து வருவதால், அவை ஆசீர்வாதங்களாக உள்ளன என்று திருத்தந்தை கூறினார்.

நாம் வாழ்கின்ற வழி நன்றாகவே செல்கின்றது, நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறிந்தே இருக்கின்றோம், எனவே மாற்றம் தேவையில்லை போன்ற சிந்தனை, தூய ஆவியாரிடமிருந்து வருவதில்லை என்றுரைத்த திருத்தந்தை, நான் எல்லாவற்றையும் புதியனவாக்குகிறேன் என்ற ஆண்டவரின் திருச்சொற்களையும் நினைவுபடுத்தினார்.

தனித்துவம் மிக்கது

தனித்துவம் மிக்கது என்று சொல்லும்போது, இந்த உலகில் தூய ஆவியார் எழுப்பியுள்ள எல்லா அருங்கொடை இயக்க குழுக்களுக்கும் பணியாற்றுவதாகும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் நிர்வாகம் என்பது பணியாற்றுவதாகும் என்றும், தங்களால் இயன்ற சிறப்பான வழிகளில், பல்வேறு தேவைகளில் இருப்போருக்கு உதவுமாறு இந்த இயக்கத்தினரைக் கேட்டுக்கொண்டார்.

இந்த உலகலாவிய ஒன்றிப்புப் பணியில் இளையோர் பிரதிநிதிகளைப் பார்க்க முடிகின்றது என்ற மகிழ்வைத் தெரிவித்த திருத்தந்தை, இளையோர், திருஅவையின் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தைக் குறித்து நிற்கிறார்கள் என்று கூறினார்.

அருங்கொடை இயக்கத்தினர் அனைவரிடமிருந்து திருத்தந்தையும், திருஅவையும் எதிர்பார்ப்பது பற்றி இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் அனைவரோடும், தூய ஆவியாரில் திருமுழுக்கைப் பகிர்தல், இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட விசுவாசிகள் குழுமமாகிய திருஅவையின், கிறிஸ்துவின் உடலாகிய திருஅவையின், ஒன்றிப்பிற்குப் பணியாற்றுதல், உடல் மற்றும் ஆன்மீக அளவில் அதிகமாகத் தேவையில் இருப்போருக்கு உதவுதல் ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.