திருத்தந்தையின் புதிய திருத்தூது மடல்

நற்செய்தியை அறிவிக்காத கொண்டாட்டம் உண்மையான கொண்டாட்டம் அல்ல” என்று குறிப்பிட்டு, கத்தோலிக்கர்கள் வெளிப்புறக் கொண்டாட்டங்களை மட்டுமே முன்னிறுத்தும், அல்லது வழிபாட்டு முறைகளில் சோம்பேறித்தனத்தை அனுமதிக்கும் அழகியல் வடிவங்களை முறியடிக்க வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 29, இப்புதனன்று “Desiderio desideravi” அதாவது, மிக மிக ஆவலாய் இருந்தேன்’ என்ற தலைப்பில் தான் எழுதி வெளியிட்டுள்ள புதிய திருத்தூது மடலில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஆவியானவர் திருஅவைக்குச் சொல்வதை ஒன்றிணைந்து கேட்பதற்காக நமது விவாதங்களை கைவிட்டு நமது ஒற்றுமையைப் பாதுகாப்போம் என்றும், வழிபாட்டின் அழகைக் கண்டு வியந்து கொண்டே இருப்போம் என்றும் கூறியுள்ளார்.

வழிபாட்டு முறையின் இறையியல் புரிதலை மீண்டும் கண்டறிய வழிவகுத்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் “Sacrosanctum Concilium என்பதன் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை, கிறிஸ்தவக் கொண்டாட்டத்தின் அழகும், திருஅவையின் வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகளும், அதன் மதிப்பைப் பற்றிய மேலோட்டமான புரிதலால் சீர்கெட்டுவிடக்கூடாது என்று தான் விரும்புவதாகவும் அதில் கூறியுள்ளார்.

ஆன்மீக உலகிலிருந்து குணமடைய, நாம் வழிபாட்டின் அழகை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இந்த மறுகண்டுபிடிப்பு என்பது ஆடம்பர சடங்குகளில் அதாவது, வெளிப்புற அழகியல் கொண்டாட்டங்களில்  அல்ல, மாறாக அகம் சார்ந்த தேடலில் திருப்தி அடைவது என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் ஒவ்வொரு அம்சமும், அதாவது, இடம், நேரம், அடையாளங்கள், வார்த்தைகள், பொருள்கள், ஆடைகள், பாடல், இசை ஆகிய அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

நற்செய்தி அறிவிப்பில்லாத ஒரு கொண்டாட்டம் உண்மையானது அல்ல, அதே போல் கொண்டாட்டத்தில் உயிர்த்த இறைவனை சந்திப்பதற்கு வழிவகுக்காத அறிவிப்புகள் உண்மையானவை அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை,  இவை இரண்டும் இல்லாத நிலை, சத்தமில்லாமல் முழங்கும் சங்கைப்  போன்றது என்றும் விவரித்துள்ளார்.

ஒட்டுமொத்த அவைக்கும் சொந்தமான வழிபாட்டுச் சடங்குகளில் ‘அமைதி’ ஒரு முழுமையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இது, பாவத்திற்காக நம்மை மனம் வருந்த தூண்டுவதோடு, மனமாற்றத்திற்கான விருப்பத்தை நோக்கி நம்மை நகர்த்தி செல்கிறது என்றும், இது இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு நம்மை ஒரு தயார்நிலைக்கு உட்படுத்துவதோடு இறைவேண்டல் செய்யவும் நம்மை ஊக்குவிக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.