கருக்கலைப்பு உரிமை இரத்துசெய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

அமெரிக்க ஐக்கிய நாட்டில், தேசிய அளவில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருந்த ஐம்பது ஆண்டுகால கருக்கலைப்பு உரிமையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜூன் 24, இவ்வெள்ளியன்று இரத்து செய்திருப்பது குறித்து திருப்பீட வாழ்வுக் கழகமும், அந்நாட்டு ஆயர்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

அந்நாட்டில் 1973ம் ஆண்டில், ரோ மற்றும் வேட் (Roe v Wade) இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது, பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992ம் ஆண்டில் பென்சில்வேனியா மற்றும் கேசே (Southeastern Pennsylvania v. Casey) இடையிலான வழக்கில், ’22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவ்வெள்ளியன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், கருக்கலைப்பு வழியாக களங்கமற்றவர்களின் மனித வாழ்வைப் பறிப்பதற்கு சட்டரீதியாக அனுமதிப்பதற்கு 1973ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்றுரைத்துள்ள திருப்பீட வாழ்வு கழகத்தின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்கள், மனித வாழ்வை ஊக்குவிக்கும் சட்டங்களை இயற்றுமாறு அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்குலக சமுதாயம், வாழ்வு மீது பேரார்வத்தை இழந்துவரும்வேளை, இந்த தீர்ப்பு, முக்கியமான விவகாரமான மனிதரின் வருங்காலம் குறித்தும், வருங்காலத் தலைமுறைகள் மீது நமக்குள்ள பொறுப்பு குறித்தும் ஒன்றிணைந்து சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது என்று, பேராயர் பாலியா அவர்கள் தெரிவித்துள்ளார்.