உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் சிறாருக்காக இறைவேண்டல்

பல்வேறு சமூகத் தீமைகளுக்கு உள்ளாகியுள்ள சிறாருக்காக இறைவேண்டல் செய்வோம், மற்றும், அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 28, இச்செவ்வாயன்று அழைப்புவிடுத்துள்ளார்.

டிசம்பர் 28, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, மறைசாட்சிகளான புனித மாசில்லா குழந்தைகள் விழாவை மையப்படுத்தி, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் இச்செவ்வாயன்று புனித மாசில்லா குழந்தைகள் (#HolyInnocents) என்ற ஹாஷ்டாக்குடன் செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சட்டத்திற்குப் புறம்பே நடத்தும் அடிமைத் தொழில், பாலியல் தொழில், உரிமை மீறல்கள், போர்கள், கட்டாயப் புலம்பெயர்வு ஆகிய அடக்குமுறைகளில் நம் சிறாரின் களங்கமற்றதன்மையை, நம் காலத்து புதிய ஏரோதுகள் பேரழிவுக்கு உட்படுத்துகின்றனர் என்றும், இச்சிறாருக்காக நாம் ஒன்றுசேர்ந்து இறைவேண்டல் செய்வோம், மற்றும், அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும், திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

புனித மாசில்லா குழந்தைகள் விழா

புனித மாசில்லா குழந்தைகள் விழா பற்றிக் கூறிய புனித அகுஸ்தீன், “வான் வீட்டில் அரும்புகள் மலர்ந்தன” என்று கூறினார். ஏரோது ஆட்சி காலத்தில் உலகின் மீட்பர் இயேசு யூதேயாவில் உள்ள பெத்லகேமில் பிறந்தார். யூதர்களின் அரசர் பிறந்துள்ள செய்தியை அரசர்கள் மூலம் தெரிந்துக்கொண்டான் ஏரோது. இயேசு யூதர்களின் அரசர் என்ற காரணத்தால் ஏரோது இயேசுவை கொலைச் செய்ய தேடினான். பெத்லேமுக்கு அருகில் 2 வயதும் அதற்குட்பட்டதுமான ஆண் குழந்தைகளை வாளுக்கு இரையாக்கி மகிழ்ந்தான். மீட்பர் இயேசுவுக்காக மாசற்ற குழந்தைகள் இறந்தனர். விவரம் அறியும் முன்னே மரணத்தைத் தழுவிய இக்குழந்தைகளைத் திருஅவை பெருமையுடன் வணங்குகிறது. ஏனென்றால் இக்குழந்தைகள் கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரை கையளித்தவர்கள்

Source: New feed